செய்திகள்

இமாச்சலப் பிரதேச நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

சிம்லா, ஆக. 12–

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

வட மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால் இயற்கை பேரிடர் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து நேற்று இமாச்சல பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் ரெக்காங் பியோ – சிம்லா தேசிய நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு வாகனம், பேருந்து உள்ளிட்ட சில வாகனங்கள் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தன.

13 சடலம் மீட்பு

தகவலறிந்து வந்த இந்தோ – திபெத் எல்லைக் காவல் படையினர் மற்றும் தேசியப் படையினர் மீட்பு பணியை தொடங்கினர். நேற்று இரவு சில சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று காலை வரையில் 13 சடலங்கள் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிகிறது.

நிலச்சரிவில் ஒரு பேருந்து சிக்கியதால் அந்த பேருந்தில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்று தெரியவில்லை. 60க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து பேசிய முதல்வர் ஜெய்ராம் தாகூர், வானிலை சீராக இருந்தால் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி துரிதப்படுத்தப்படும் என்றும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை நாளை நேரில் சென்று பார்வையிட திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *