செய்திகள்

இமாச்சலப்பிரதேச சட்டப் பேரவைக்கு தேர்தல்: 68 தொகுதிகளுக்கு 412 வேட்பாளர்கள் போட்டி

காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சிம்லா, நவ. 12–

இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ந்தேதி நடைபெற உள்ளது.

இமாச்சல சட்டப் பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு, இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் மண்டி மாவட்டத்தின் ஆஹான் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

டிசம்பர் 8 ந்தேதி வாக்கு எண்ணிக்கை

68 தொகுதிகளுக்கு, 7 ஆயிரத்து 884 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 55 லட்சத்து 74 ஆயிரத்து 793 வாக்காளர்கள் இத்தேர்தலில் ஜனநாயகக் கடமையாற்றவுள்ளனர். இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டாலும், பாஜக, காங்கிரஸ் இடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது.

இந்திய ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர், அவரது தந்தை மற்றும் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். முன்னாள் முதலமைச்சர் பிரேம் குமார் துமல் உள்ளிட்டோர் தங்களது வாக்கை பதிவு செய்தார். ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜகவும், ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன. தேர்தலையொட்டி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *