பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
புதுடெல்லி, அக்.13–
இமாச்சலப்பிரதேசத்தில் ‘வந்தே பாரத்’ விரைவு ரெயிலின் 4வது ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று காலைதொடக்கி வைத்தார்.
இந்த ரெயில் டெல்லி மற்றும் இமாச்சலப்பிரதேசத்தின் உனா நகரின் அம்ப் அன்தவுராவுக்கும் இடையே இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் அம்பாலா, சண்டிகர், ஆனந்த்பூர் சாஹிப் மற்றும் உனா ஆகிய நிறுத்தங்களில் நிற்கும் என்றும் புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் ரெயில் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் அதிவேக வந்தே பாரத் விரைவு ரெயில் சுமார் 160 கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த ரெயில் சேவை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
வந்தே பாரத் விரைவு ரெயிலின் 3-வது ரயில் சேவையை குஜராத்தின் காந்தி நகருக்கும் – மும்பைக்கும் இடையே கடந்த மாதம் பிரதமர் துவக்கி வைத்தார்.
இந்நிலையில், 4-வது ரெயில் சேவையை இமாச்சலப்பிரதேச மாநிலம் உனா ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை இன்று காலை பிரதமர் கொடியசைத்து தொடக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்பின் பிரதமர் மோடி பொது கூட்டத்தில் பேசும்போது, இமாச்சலப்பிரதேசம் மற்றும் உனாவுக்கு தீபாவளி பண்டிகை முன்னரே வந்து விட்டது.
நான் இன்று புதிய வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளேன். நாட்டில் அறிமுகம் செய்யப்படும் 4-வது வந்தே பாரத் ரெயில் இதுவாகும்.
கிராமப்புற சாலைவழி மேம்பாடு, அனைவருக்கும் குடிநீர் வினியோகம் கிடைக்க செய்தல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பில் முன்னேற்றத்துடன் கூடிய சுகாதாரநலன் சார்ந்த வசதிகள் ஆகியவை அரசின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் ஆகும்.
புதிய இந்தியாவானது, விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.