செய்திகள்

இமாச்சலப்பிரதேசத்தில் ரூ.1,470 கோடியில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ரூ.3,650 கோடி திட்டங்களுக்கு அடிக்கல்

பிலாஸ்பூர், அக்.6-

1,470 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இமாச்சலபிரதேச எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 3 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் மோடி நேற்று இமாச்சலபிரதேச மாநிலம் பிலாஸ்பூருக்கு சென்றார். அவரை மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்த மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

ரூ.1,470 கோடி செலவில் முற்றிலும் பணி முடிவடைந்து செயல்பாட்டுக்கு வந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைத்தார்.

பிலாஸ்பூரில், ரூ.140 கோடி செலவில் கட்டப்பட்ட அரசு ஹைட்ரோ என்ஜினீயரிங் கல்லூரியையும் அவர் திறந்து வைத்தார். அத்துடன், ரூ.3 ஆயிரத்து 650 கோடி செலவிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன் முடிவடைந்த திட்டங்களையும் திறந்து வைத்தார்.

247 ஏக்கரில்…

எய்ம்ஸ் மருத்துவமனை, 247 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 24 மணி நேரமும் அவசரகால மருத்துவ வசதிகளும், டயாலிசிஸ் வசதிகளும் உள்ளன. அல்ட்ராசோனோகிராபி, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், அம்ரித் பார்மசி, மக்கள் மருந்தகம் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

30 படுக்கைகள் கொண்ட ‘ஆயுஷ்’ கட்டிடமும் உள்ளது. 18 சிறப்பு மருத்துவம், 17 சூப்பர் ஸ்பெஷாலிட்டி துறைகள், 18 மாடுலர் ஆபரேஷன் தியேட்டர்கள், 750 படுக்கைகள், 64 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

மிகவும் உட்புற பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களுக்கு மருத்துவ சேவை அளிப்பதற்கென சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையுடன் கூடிய ‘எய்ம்ஸ்’ மருத்துவ கல்லூரியில் ஆண்டுதோறும் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 100 மாணவர்களும், நர்சிங் படிப்புக்கு 60 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள்.

ரூ.1690 கோடி

நான்கு வழிச்சாலை

பின்ஜோர் – நலாகருக்கு இடையே 1690 கோடி ரூபாய் மதிப்பில் என்எச் – 105 தேசிய நெடுஞ்சாலையின் நான்கு வழி திட்டத்திற்கும் பிரதமர் இன்று அடிக்கல் நாட்டினார். அத்துடன் நலாகரில் 350 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள மருத்துவக் கருவிகள் பூங்காவிற்கும் அடிக்கல் நாட்டினார்.

அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசிய பிரதமர், புனிதமான விஜயதசமி நாளில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

சுகாதாரம் மற்றும் கல்விக்கான இரண்டு பரிசுகளை பிலாஸ்பூர் பெற்றுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். குல்லு தசரா பண்டிகையில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கியதற்காக நன்றி தெரிவித்த அவர், தேசத்தின் நலனுக்காக பகவான் ரகுநாத்திடம் தாம் பிரார்த்தித்ததாக கூறினார். தாமும் தமது சகாக்களும் இந்தப் பகுதியில் வாழ்ந்து பணி செய்த பழைய காலங்கள் பற்றியும் பிரதமர் நினைவு கூர்ந்தார் “. இமாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க நான் அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன்” என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *