செய்திகள்

இமாச்சலபிரதேசத்தில் கார் விபத்து: சைதை துரைசாமி மகன் வெற்றியை தேடும் பணி 3-வது நாளாக தீவிரம்

சென்னை, பிப். 6–

இமாச்சலபிரதேசத்தில் கார் விபத்தில் காணாமல் போன சைதை துரைசாமி மகன் வெற்றியை தேடும் பணியில் 3வது நாளாக பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (வயது 45) தொழில் அதிபரான இவர் தந்தையுடன் சேர்ந்து மனித நேய பயிற்சி மையத்தை கவனித்து வருகிறார். பிரபல சினிமா இயக்குனர் வெற்றி மாறனிடம் பயிற்சி பெற்றுள்ள வெற்றி கடந்த 2021-ம் ஆண்டு விதார்த்-ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான ‘என்றாவது ஒருநாள்’ என்கிற படத்தை இயக்கி உள்ளார்.

இந்த நிலையில் வெற்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது உதவியாளரான திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த கோபி நாத்துடன் இமாச்சலபிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார்.பல்வேறு இடங்களை இருவரும் சுற்றி பார்த்தனர். பின்னர் அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக வெற்றியும், கோபிநாத்தும் அங்குள்ள விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டனர். உள்ளூரை சேர்ந்த வாடகை காரை தஞ்சின் என்கிற டிரைவர் ஓட்டிச் சென்றார். கஷங் நாலா என்கிற மலைப்பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் 200 அடி பள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்த சட்லஜ் நதியில் கார் பாய்ந்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பேரிடர் மீட்பு குழுவினரும் விரைந்து சென்று காரையும் காரில் இருந்தவர்களையும் மீட்பதற்கு களம் இறங்கினார்கள்.சட்லஜ் நதியில் தண்ணீரில் மூழ்கியபடி கிடந்த காரை காரை கயிறு கட்டி கரையோரமாக இழுத்தனர். அப்போது டிரைவர் தஞ்சின் காருக்குள் உயிரிழந்த நிலையில் கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பள்ளத்தாக்கு பகுதியில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோபிநாத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். காரில் பயணம் செய்த வெற்றியை காணவில்லை. சட்லஜ் நதியில் அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார் ஆகியோர் மாயமான வெற்றியை தீவிரமாக தேடி வருகிறார்கள். நேற்று முன்தினம் கார் சட்லஜ் நதியில் பாய்ந்த நிலையில், இன்று 3-வது நாளாக வெற்றியை தேடி கண்டு பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுபற்றி சென்னையில் உள்ள சைதை துரைசாமிக்கு தகவல் தொவிக்கப்பட்டது. மகன் மாயமான தகவலை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அவரது மனித நேய மையத்தில் படித்த பலர் இமாச்சல பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக உள்ளனர். அவர்களும் மீட்புப் பணிக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.

ஸ்பெயினில் இருந்தபடியே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சட்லஜ் நதியில் காணாமல் போன வெற்றியை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள இமாச்சலபிரதேச போலீசாருடன் தொடர்புக் கொண்டு மீட்பு பணியை விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டார். வன உயிரினங்கள் மீது வெற்றி மிகுந்த ஆர்வம் கொண்டவர். வெற்றி வனப்பகுதிகளுக்கு சென்று அங்கேயே தங்கி இருந்து புகைப்படங்களை எடுப்பதிலும் ஆர்வம் கொண்டு உள்ளார். அதுபோன்ற புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் வாழும் பனிக்கரடிகளை புகைப்படமாக எடுப்பதற்காகவே வெற்றி அங்கு சென்றிருப்பதும் தெரிய வந்து உள்ளது. சினிமா மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த வெற்றி கிரைம் திரில்லர் படம் ஒன்றை இயக்குவதற்கும் திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில்தான் மாயமாகி உள்ளார்.

சைதை துரைசாமிக்கு வெற்றி ஒரே மகன் ஆவார். 2012-ம் ஆண்டு நடைபெற்ற வெற்றியின் திருமண நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டார். வெற்றியின் மனைவி பெயர் வசுந்தரா. இவர்களுக்கு சித்தார்த்தா, சங்கமித்ரன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *