சிறுகதை

இப்படியொரு நிலைமை – மு.வெ.சம்பத்

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து குமார் பரபரப்பானார். அந்த சிறிய ஊரில் வார்டு கவுன்சிலராக நிற்க வேட்புமனு செய்து அது ஏற்கப்பட்டதென அறிந்து மகிழ்வடைந்தார். அடுத்து மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரிப்பில் முனைய வேண்டுமென தயாரானார்.

தனது சகாக்களுடன் முதலில் ஆலோசனை நடத்தினார். ஆளுக்கொரு கருத்தைக் கூற குமார் சற்று தளர்ந்து எப்படி சமாளிக்கப் போகிறோம் முதலில் சகாக்களை என்ற யோசனையில் ஆழ்ந்தார். பின் எப்படி பிரசாரம் மேற்கொள்ளுவெதன சகாக்களுடன் ஆலோசித்தார்.

மொத்தம் ஏழு தெருக்கள் அடங்கிய மக்கள் தான் வாக்களிக்கப் போகிறார்கள். காலை மாலையென சுற்றி மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கத் திட்டமிட்டார். அன்று நல்ல நாள் என எல்லோரும் கூற, குமார் தன் வீட்டிலிருந்து கிளம்பினார். முதலில் நுழைந்த தெருவைக் கண்டதும் குமார் ஆடிப் போனார்.

தெருவில் எல்லா வீட்டுக் கதவும் சாத்தியிருந்தது. தெருவின் நடுவில் ஒரு பலகை வைக்கப்பட்டிருந்தது. அதில் எங்கள் அடிப்படை வசதிகள் எதுவுமே செய்து தராத உங்களைக் காண வெட்கப்படுகிறோம் என எழுதியிருந்தது. இது எல்லாக் கட்சி வேட்பாளர்களுக்கும் பொருந்தும் என்று எழுதியிருந்தது. குமார் அடுத்த தெரு செல்லலாமெனக் கூற, அந்தத் தெருவின் வாயிலில் அத்தெரு மக்கள் எல்லோரும் கூடி நின்று வேட்பாளர்களுக்கு அனுமதியில்லையென பலகை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை மீறி செல்வது இயலாத காரியமாகத் தோன்றியது குமாருக்கு சற்று முன் தான் வேறொரு கட்சி வேட்பாளரை நுழைய விடாமல் அனுப்பியதாக தகவல் கேட்டு குமார் அங்கிருந்து நகர்ந்தார்.

அடுத்த தெருவின் வாயிலில் அந்தத் தெரு மக்கள் கூடி நின்று எவ்வளவு பணம் தருவீர்கள்? எவ்வளவு பரிசுப் பொருட்கள் தருவீர்கள்? என்று சரமாரியாகக் கேட்டனர். மற்ற தெருவினில் என்ன கேட்பார்களே என்று குமார் சற்று யோசனையில் ஆழ்ந்து வீட்டிற்குத் திரும்பினார். என்ன இப்படியொரு நிலமை என கலங்கினார் குமார். அடுத்து என்ன செய்வதென குமார் சிந்தனையில் ஆழ்ந்தார்.

தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் எல்லோரும் கலக்கமடைந்ததாக வந்த செய்தியைக் கேட்ட குமார் சகாக்களை அழைத்து மேற்கொண்டு வேறெதாவது செய்தியிருந்தால் சேகரித்து வாருங்கள் என்று அனுப்பி வைத்தார். ஊர்ச் சபையினர் எல்லா வேட்பாளர்களையும் ஒரு கூட்டத்திற்கு அழைத்தனர்.

கூட்டத்திற்கு வந்த வேட்பாளர்களிடம் ஊர் சபைத் தலைவர் எங்களது கோரிக்கைகள் இந்தாருங்கள். இதை நிறைவேற்றித் தருவேன் என்று உத்திரவாதம் அளிப்பவற்கே எங்களது ஓட்டு என்றார்.

வேட்பாளர்கள் சற்று யோசித்து விட்டு கட்டாயம் செய்வோம் என்றனர். ஊர் சபைத் தலைவர் இன்னொரு உறுதிப் பத்திரம் மாதிரியைத் தந்தார். அதில் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்ற உத்திரவாதம் கையொப்பமிட்டு அதற்கு உண்டான செலவை நாங்கள் தந்துள்ளோம். அதை ஊர் சபையில் கட்டுபவர்களுக்கே எங்கள் ஒட்டு மொத்த ஓட்டு என்றனர். சற்று அவகாசம் தாருங்கள் என வேட்பாளர்கள் கேட்க தலைவர் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் யாரும் ஒரு முடிவு தெரியும் வரை பிரசாரத்திற்கு வரக் கூடாதென்றார். கூட்டம் கலைந்தது. இளைஞர்கள் எல்லோரும் மகிழ்வுடன் கலைந்து சென்றனர்.

அடுத்த இரண்டு நாட்களில் மறுபடியும் கூட்டத்தைக் கூட்டிய தலைவர் வேட்பாளர்களிடம் என்ன முடிவு என கேட்டார்.

ஆளும் கட்சி சார்பில் நிற்கும் வேட்பாளர் நீங்கள் கேட்கும் திட்டத்திற்கான பாதிக்கு மேல் உள்ள செலவை அரசாங்கம் தான் ஒதுக்க வேண்டும். இவ்வளவு பெரிய தொகைக்கு நான் எங்கே செல்வேன் என்றார். வாக்களிப்பது ஜனநாயக கடமை அல்லவா என்றார். உடனே தலைவர் பொது வாழ்வில் ஈடுபடும் நீங்கள் மக்கள் வசதிக்காக சேவை செய்வது ஜனநாயகக் கடமையல்லவா என்றார். அப்போது நாங்கள் ஜனநாயகக் கடமை ஆற்றவில்லையா என தர்க்கம் செய்ய ஆரம்பித்தவரிடம் தலைவர் இது நமது ஊர்ப் பிரச்னை என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றதும் அவர் மௌனமாகி என்னால் முடிந்ததைச் செய்கிறேன் என்றார். உறுதிப் பத்திரம் கையெழுத்திட முடியாதென்றார்.

சரி உங்கள் இஷ்டம் நடப்பது நன்றாகவே நடக்கட்டும் என்றார்.

தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான போது குமார் மிகவும் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றமாக தேர்தல் ஆணையம் அறிவித்தது கண்டு அதிர்ந்த ஆளும் கட்சி சார்பில் நின்ற வேட்பாளர் இப்படியொரு நிலமை எப்படி ஏற்பட்டதெனக் கேட்க,

குமார் அவர்கள் அந்த கோரிக்கைகளில் உள்ள தொகுதி மேம்பாட்டில் வரும் வேலைகளைப் பிரித்தெடுத்து அதற்குண்டான பணத்தை ஊர்சபையில் கட்டி விட்டார்.

ஓட்டுக்குப் பணம் கொடுப்பது போன்ற செலவுகள் இதனால் குறையுமெனக் கணக்கிட்டு பணத்தைக் கட்டினார்.

ஜெயித்தார் என்றனர். நாளை முதல் சிறு சிறு வேலைகள் துவங்கப் போவதாகப் பேசிக் கொள்கின்றனர் என்றதும் நமக்கு இப்படியொரு நிலமையா, மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள் என்பதையே காட்டுகிறது என்றதும் அவர் மனைவி இனிமேலாவது வீட்டைப் பற்றிக் கவலைப்படுங்கள் என்றாள்.

Leave a Reply

Your email address will not be published.