சிறுகதை

இப்படியும் பேசும் உலகம் ….! – ராஜா செல்லமுத்து

அன்று இரவு நடுநிசி கடந்த பின்பும் தூங்காமல் கண்விழித்துக் கொண்டிருந்தாள் ரேகா.

நவநீதன் அப்படி கேட்டிருக்கக் கூடாது தான். கேட்டு விட்டார். என்ன செய்ய? வாடகை வீட்டில் குடியிருப்பது பெருத்த வருத்தத்தைத் தரக்கூடிய ஒரு விஷயம் தான். அதுவும் தனி மனுசியாய் அவள் குடித்தனம் இருப்பது நவநீதனுக்கு ஒரு விதமான சந்தேகத்தை ஏற்படுத்தியது. எப்பாேது வீட்டை விட்டு செல்கிறாள்.எப்போது வீட்டிற்கு வருகிறாள் என்பதையெல்லாம் தன் மூளையில் எழுதி வைத்துக்கொண்டு, அவள் வருகை எதிர்பார்த்து காத்து இருப்பார்.

இரவு 8 மணியைக் கடந்து அவள் வீட்டுக்கு வந்தால் அவளை ஜாடை மாடையாகப் பேசுவதும் இரட்டை அர்த்தத்தில் திட்டுவதுமாய் இருப்பார் யாரையோ பேசுகிறார் என்று மற்றவர்கள் நினைத்தாலும் தன்னைத்தான் பேசுகிறார் என்று ரேகாவிற்கு அப்பட்டமாக விளங்கும்.

ஊர் விட்டு ஊர் வந்து சாதிக்க வேண்டும் என்ற நிலையில் தன்னைச் சாதனையாளராக மாற்ற வேண்டுமென்று வாழ்ந்து கொண்டிருப்பவளின் மனதைச் சல்லடையாகப் புண்படுத்துவது எந்த வகையில் நியாயம்? நவநீதன் அன்று இரவு பேசியது அவளுக்கு கடுமையான ரணத்தை ஏற்படுத்தியது.

இனி இந்த வீட்டில் இருப்பது நியாயம் இல்லை . இருந்தால் நமக்கு அவமானம். நான் எங்கே போகிறேன்? என்ன வேலை செய்கிறேன்? என்று இந்த நவநீதனுக்கு தெரியுமா? இவர் என்ன எனக்கு காவல்காரரா? எப்படி வாழ வேண்டும் என்று எனக்குத் தெரியாதா? இத்தனை பட்டங்கள், பதவிகள், கின்னஸ் சாதனை என்று அத்தனையும் படித்து இந்த உலகத்தை விரல் நுனியில் வைத்துக் கொண்டிருக்கும் என்னையே இந்தப் பாடு படுத்தும் இந்த உலகம் சாதாரணப் பெண்ணை என்ன பாடுபடுத்தும்? என்று தனக்குத்தானே வருந்திக் கொண்டாள் ரேகா

அவள் தலைக்கு மேலே ஓடிக் கொண்டிருந்த காத்தாடியை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தாள். அது வேகமாகவும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் ஓடிக்கொண்டே இருந்தது.

அந்த இரவில் எப்போது அவள் தூங்கினாள் என்று அவளுக்கே தெரியாது.

காலையில் கண்விழித்த போது கிழக்குச் சூரியன் உதித்து கொஞ்சம் மேலே வந்திருப்பது மட்டும் அவளுக்கு தெரிந்தது. அவசரமாக எழுந்து குளித்து உடைமாற்றிக் கொண்டு அலுவலகத்துக்குச் செல்ல தயாரானாள் ரேகா

எப்போது வெளியே சென்றாலும் அவள் நடை உடை பாவனைகளைப் பார்த்து நக்கல் செய்வதும் கேலி செய்வதுமாய் இருக்கும் நவநீதன் அன்றும் அவள் வீட்டை விட்டு வெளியேறும் போது வாசலில் அமர்ந்திருந்தார்.

இன்று அவர் பேசுவதற்குப் பதிலாக ரேகாவே நவநீதனிடம் வந்தாள்.

ஐயா வணக்கம். என்னைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனா பெண்கள்ன்னா இப்படித்தான் இருப்பாங்க அப்படின்னு உங்க தலையில தப்பா எழுதி வச்சிருக்கீங்க. முதலில் அதை மாத்துங்க. ஒரு பெண் தனியாக வாழ்றதும் அவள் சாதனைக்காக சில மனிதர்களை சந்திக்கிறதும் இரவு நேரங்கள்ல தாமதமா வர்றதும் அந்தப் பெண் தப்பு செஞ்சிட்டு தான் வருவா அப்படின்னு நீங்க மனக்கணக்கு போட்டு உட்கார்ந்து இருக்கிறதும் மடத்தனமான விஷயம்.

இதே உங்க பெண்ணா இருந்தால்…? உங்க மனைவியா இருந்தால்…? இந்த மாதிரியான தப்பான சிந்தனை உங்களுக்கு வருமா? வராது ஏன்னா தப்பு செஞ்சாலும் அது உங்க பிள்ளைங்க , உங்க குடும்பம்.

நான் யாரோ தானே? அதனால தான் நீங்க வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுறீங்க? நான் இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து என்னுடைய நடவடிக்கை நீங்க கவனிக்கிறது எனக்குத் தெரியும். அதுக்காக என்னுடைய இயல்பான வாழ்க்கைய உங்களுக்காக மாத்திக்க முடியாது. உங்க வீட்ல குடித்தனம் இருக்கிறேன்கிற காரணத்துக்காக என்னுடைய மரியாதையும் என்னுடைய தகுதியும் நீங்க தரம் தாழ்த்தி பாக்குறத என்னால உணர முடிஞ்சது.

இனிமேலும் இந்த வீட்டில இருக்கிறது எனக்கு நியாயமாப்படல. ரொம்ப நன்றி. இன்னைக்கு சாயங்காலம் உங்க வீட்ட நான் காலி பண்ணிடுறேன். ஆனா உங்க மனச மாத்திக்கங்க. எல்லா பெண்களும் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல அவங்களுக்கும் சில மரியாதை இருக்கு. தகுதி இருக்குது அப்படிங்கறதை மட்டும் உணர்ந்துக்கோங்க குட் பாய் என்று ராஜ நடை போட்டுச் சென்றாள் ரேகா

அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் நவநீதன்.

சொன்னது போலவே அன்று மாலை அந்த வீட்டைக் காலி செய்தாள் ரேகா.

எவ்வளவு சொல்லியும் பெண்களைப் பற்றிய தவறான எண்ணங்களைத் தன் தலைக்குள்ளிருந்து இறக்காத நவநீதன் எல்லாம் தப்பு பண்ணிட்டு பேசிட்டு இருக்காங்க. இதெல்லாம் நான் கண்டுக்கிறதில்ல. ரேகா போனது ரொம்ப நல்லது என்று நினைத்துக் கொண்டிருந்தார் நவநீதன்

நாட்கள் கடந்தன.

ஒரு நாள் அவரின் வீட்டிற்கு ரேகாவின் பெயர் தாங்கிய ஒரு கடிதம் வந்தது அந்தக் கடிதத்தை ரேகாவிடம் கொடுப்பதற்கோ இல்லை கடிதம் வந்திருக்கிறது என்ற தகவல் சொல்வதற்கோ நவநீதன் மனது இடம் கொடுக்கவில்லை

என்னதான் அந்தக் கடிதத்தில் இருக்கிறது என்பதைக் கிழித்துப் பார்த்தவருக்கு அதிர்ச்சி.

உலக சாதனை படைத்திருக்கிறார் ரேகா. அவருக்குப் பாராட்டு விழா அமெரிக்காவில் நடக்க இருக்கிறது . பெண்களின் முன்னேற்றத்திற்காக அவர் செய்த சேவைகள், அவர் எழுதிய கட்டுரைகள், எல்லாம் உலகப் பார்வையாளர்களின் பாராட்டுக்களைப் பெற்று முதலிடம் வந்திருக்கிறார் ரேகா என்று அந்தக் கடிதம் அத்தனை எழுத்துக்களையும் தாங்கி நின்றது.

அதுவரையில் ரேகாவைப் பற்றிய தவறான எண்ணம் கொண்டிருந்த நவநீதன் கன்னத்தில் யாரோ பளார் பளார் என்று அறைவது போல் இருந்தது .

இனியும் ரேகாவை நாம் தவறாக நினைப்பது தவறு என்று நினைத்தார்.

உடனே ரேகாவின் செல்பேசிக்கு அழைத்தார்.

ஏன் இவர் அழைக்கிறார்? என்று இரு மனதாக அவரின் அழைப்பை ஏற்றார் ரேகா.

அம்மா என்ன மன்னிச்சிடுமா. நான் தவறு பண்ணிட்டேன். எல்லா பொம்பளைங்களும் ஒரு மாதிரி இல்ல. உங்கள மாதிரி உயர்ந்த பெண்களும் இந்த பூமியில் வாழ்ந்துட்டுத் தான் இருக்கிறாங்க. என்னுடைய எண்ணம், சிந்தனை எல்லாம் நாம் மாத்திக்கிறேன். நீயும் என் பொண்ணு தான்மா; என்ன மன்னிச்சிரு என்று கண் கலங்கிய படியே பேசினார் நவநீதன்.

ஐயா நீங்க பெரியவங்க ; அப்படி எல்லாம் பேசக்கூடாது. நான் உங்க வீட்டுக்கு வாரேன் என்று அத்தனை தவறுகளையும் துடைத்தெறிந்து விட்டு நவநீதனைப் பார்க்கக் கிளம்பினாள் ரேகா.

எல்லா பெண்களையும்ம் நாம் தவறான பார்வையில் பார்ப்பது தவறு என்று தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார் நவநீதன்.

தடைகளைத் தகர்த்துச் சாதனை படைத்த திருப்தியில் வீர நடை போட்டுக் கொண்டிருந்தாள் ரேகா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *