சிறுகதை

இப்படியும் சிலபேர் – ராஜா செல்லமுத்து

உதயன் இன்று இருக்கும் உயரமே வேறு. பணம், பொருள், புகழ் , அந்தஸ்து, வீடு, வாசல், சொத்து, சுகம் என்று அவர் பார்க்காத எல்லைகள் இல்லை என்ற அளவிற்கு இன்பத்தின் உச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் எச்சில் கையில் ஈ ஒட்டாத கருமி. சமூகத்தில் உதயனின் பெயர் உயரத்தில் இருந்தாலும் அவரின் நடவடிக்கைகள் பள்ளத்தில் கிடந்தது.

பத்து பைசா செலவு வைக்காத கஞ்சப் பேர்வழியாகவும் அடுத்தவர்களுக்கு உதவி செய்யாத ஈனப்பிறவியாகவும் இருந்து வந்தான் உதயன்.

திரும்பும் திசையெல்லாம் வீடு. பார்க்கும் திசையெல்லாம் சொத்து என்று அத்தனை வாங்கி குவித்து இருந்தாலும் ஈகை குணம் என்பது அவர் இதயத்தில் இல்லாமலிருந்தது. மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை அவரிடம் இல்லை.

பேசும்போது ஒவ்வொரு பேச்சிலும் இனிப்பைத் தொட்டு, சர்க்கரையாகப் பேசுவார். ஆனால் செயலில் ஒன்றும் அது இருக்காது. இவ்வளவு உயரத்தில் இருந்தும் மற்றவர்கள் வாழ வேண்டும். மற்றவர்களும் நம்மைப் போல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு துளிகூட கிடையாது.

அவரின் படுக்கையறை, சமையலறை, அவரின் கழிவறை. உதயன் தன்னைப் போல மற்றவர்களை நினைக்க மறுக்கிறார். அவருக்குள் என்ன இப்படி ஒரு கேவலமான புத்தி என்று அவரைத் தேடி சென்றவர்கள் சலித்துப் போய் சொல்வார்கள்.

சொல்லும் வார்த்தைகளையெல்லாம் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அவரைப் பார்ப்பதற்காக சக்தி அவர் அலுவலகம் சென்றான். நேரடியாக உதயனை முதலில் சந்திக்க முடியாத சக்தி வரவேற்பறையில் அமர்ந்து இரண்டு மணி நேர இடைவெளியில் உதயனைச் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

‘சொல்லுங்க தம்பி என்ன வேணும்?’ என்று கேட்டார்.

‘சார் நான் படிச்சு முடிச்சிட்டு ரொம்ப நாளா சும்மா தான் இருக்கேன். எனக்கு ஏதாவது வேலை வாங்கித் தாங்க. தர முடியுமா? வயசான அம்மா, அப்பா, தங்கச்சி, வாடகை வீடு. ரொம்ப கஷ்டம் சார். அதனால நீங்க ஏதாவது வேலை வாங்கி கொடுத்தா அது எனக்கு உபயோகமாக இருக்கும்’ என்று உறுதியாகச் சொன்னான் சக்தி.

நெற்றியிலும் தன் நெஞ்சில் இருக்கும் அழுக்கை தன் விரல் கொண்டு தேய்த்து அதைக் கீழே போட்டுக் கொண்டே பேசினார் உதயன்.

‘இப்பவெல்லாம் வேலை கிடைப்பது. ரொம்ப கஷ்டம் தம்பி. யாரும் சிபாரிசு எல்லாம் எடுத்துக் கொள்றதில்லை. நான் சொன்னாலும் யாரும் கேட்கப் போவதில்லை. அதை நீங்களே பாத்துக்கோங்க’ என்று ஒரே வரியில் சொன்னான் உதயன்.

‘சரி சார். உங்களுக்குத் தெரியாத ஆட்கள் யாரும் இல்ல. நீங்க நெனச்சா ஒருவேல எனக்கு வாங்கித் தர முடியும்’ என்று மன்றாடினான் சக்தி.

‘அதுவெல்லாம் இல்ல தம்பி; எல்லாம் மலையேறிப் போச்சு. யாரும் என் பேச்ச மதிக்கிறது இல்ல. உங்களுடைய வாழ்க்கையை நீங்களே தெரிஞ்சுக்கோங்க’ என்று கொண்டு வந்த காபியைக் கூட குடிக்க விடாமல் விரட்டி விட்டார் உதயன்.

வெளியே வந்த சக்தி நொந்து நூலாகி நின்றான்.

உதயன் கார் பார்க்கிங்கில் இரண்டு மூன்று கார்கள் சும்மாவே நின்று கொண்டிருந்தன. வேலையாட்கள், பணியாளர்கள் என்று நிறைய பேர் இருந்தார்கள். இவ்வளவு சொத்து இருக்கு. ஒரு மனிதனால் ஒரு சின்ன வேலை வாங்கித்தர முடியாதா? கேவலம் அவனாக வாழ்ந்து உணவு சாப்பிட்டு அவனாக சாக வேண்டும் என்று நினைக்கும் ஈனப்பிறவி உதயன் என்று மனதில் நினைத்துக் கொண்டான் சக்தி.

உதயன் பற்றி அவர் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறான்.

படித்து முடித்தவுடன் ஒருவேளை சோற்றுக்கு அல்லாடிக்கொண்டு இருந்த காலம். அது தான் படித்த சான்றிதழை எடுத்துக்கொண்டு தெருத் தெருவாக அலைந்து தனக்கு ஏதாவது வேலை கிடைக்காதா? நாமும் சம்பாதிக்க மாட்டோமா? நம் வயிற்றுப் பசியும் தீராதா ? என்று ஒவ்வொரு நாளும் நடையாக நடந்து நண்பன் ஒருவன் மூலமாக இன்னொரு நண்பரைப் பிடித்து அதில் கிடைத்த வேலையில் காலூன்றி பின் கொஞ்சம் கொஞ்சமாக சொத்து சுகம் சம்பாரித்து இன்று பங்களா கோடி என்று வாழ்ந்து கொண்டிருக்கும் உதயன், மிகவும் சாதாரண நிலையில் இருந்து வந்தவன் தான். அவர் ஒன்றும் பரம்பரை பணக்காரன் கிடையாது என்பதை நண்பர்கள் சொல்ல அதைக் கேட்டு இருந்தது சக்தி நினைவில் வந்து போனது.

‘வேலை இல்லை. வேலை வாங்கித் தர முடியாது’ என்று சொன்ன உதயனின் வார்த்தையைக் கேட்டு முகத்தை தொங்கப் போட்டு வந்த சக்தியை இடைமறித்தான் நண்பன்.

‘என்ன சக்தி ? ஏதாவது உதவி செஞ்சானா உதயன்? ஏதாவது?’ என்று கேட்டபோது சக்தி அதற்கு பதில் சொல்ல முடியாமல் உதட்டை மட்டுமே பிதுக்கினான்.

‘இங்க பாரு சக்தி. மனுசங்களில் 2 சாதிதான். 1 இட்டார் பெரியோர். 2 இடாதோர் இழிகுலத்தோர். பட்டாங்கில் உள்ள படி; அப்படின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. அது மாதிரி தான் இங்க இருக்கிற பசங்க ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒண்ணு தான் பட்ட கஷ்டத்த எந்த மனுஷனும் படக்கூடாது அப்படிங்கிறது ஒருவகை மனுசன். தான் பட்ட கஷ்டம் அடுத்தவனும் படனும்கிறது இன்னொரு வகை மனுசன். உதயன் இரண்டாவது வகையைச் சேர்ந்தவன்.

எல்லாம் மனுஷங்களும் இங்கே இன்னொரு நண்பர்கள் மூலமாகத்தான் வாழ்க்கை ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா அவங்க வசதியான வாழ்க்கை வரவும் உதவி என்ற வார்த்தையை மறந்துருறாங்க. உதயன் கூட அப்படித்தான். அவனுக்கு நிறைய நண்பர்கள் அதனால் தான் இன்னைக்கு இந்த ஒசரத்துல இருக்கான். ஆனா அவர் மத்தவங்களுக்கு உதவி செய்வதில்லை.

இந்த உலகத்தில் நிறையப் பேர் உதயன மாறி இருக்கானுக. அவனுகள நம்பாதே. உன்னுடைய முயற்சியை நீயே தொடங்கு ; அதுதான் உன் வாழ்க்கைக்கு நல்லது’ என்று அந்த நண்பன் சொன்னபோது, சக்திக்கு அதுதான் சரியெனப்பட்டது.

தன்னுடைய முயற்சியைத் தானே தொடங்க ஆரம்பித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *