சிறுகதை

இப்படியும் ஒரு காதல் | நன்னிலம் இளங்கோவன்

‘‘ஏன்….ணா அப்பாவ அவசரப்பட்டு முதியோர் இல்லத்தில சேர்த்தீங்க? என்கிட்ட கொண்டாந்து விட்டுருக்கலாம்ல?’’

‘‘என்னம்மா இப்படி சொல்லிட்ட. நான் ஒன்னும் அப்பாவ முதியோர் இல்லத்தில கொண்டு போய்

விடல . உன்னோட அண்ணிகிட்ட, கோபிச்சுக்கிட்டு என்கிட்டக்கூட சொல்லிக்காம அவரா போய் சேர்ந்துகிட்டாரும்மா. நீ என்னை தப்பா நினைக்காத . அப்பாவோட குணம் தான் உனக்கு தெரியுமே. தொட்டதுக்கும் கோபப்படுவார்னு.

தாமோதரன் முதியோர் இல்லத்துக்கு வந்து இன்றோடு ஒரு மாதம் முடிந்துவிட்டது. இருதய நோய்க்கு மனைவியை பறிகொடுத்தவர். மருமகளிடம் இருக்க பிடிக்காமல் இங்கு வந்து சேர்ந்துவிட்டார்.

பிரபல நிறுவனத்தில் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற நிலையில் கடைசியாக கிடைத்த தொகையை வங்கி ஒன்றில் டொபாசிட் செய்து வைத்துள்ளார். மகன் பிரபு அரசுத்துறை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறான்.

அன்று அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தபின் அப்பாவை காணாமல், மனைவி திலகாவிடம் கேட்க அவளோ அலட்சியமாக…. மதியத்திலிருந்தே காணவில்லை. சாப்பிடவும் வரவில்லை. ஒரு சமயம் அவரோட நண்பர் வீட்டுக்கு போயிருப்பார்னு நினைக்கிறேன் என்றாள்.

இதை கேட்டதும் எனக்கு ஒரு போன் போட்டு சொல்லியிருக்கலாம்ல . நீ பாட்டுக்கு அலட்சியமா

இருந்துட்டே .இப்படித்தான் உன் புள்ளை காணாமல் போனாலும் அலட்சியமா இருப்பீயா? என்று ஆவேசமாக சத்தம் போட்டுவிட்டு வெளியேறிவிட்டான்.

அப்பாவின் நண்பர் ரகுபதி வீட்டுக்கு சென்று விசாரித்தான். இங்கு வரவில்லையே என்று பதற்றமாக பதில் சொன்னார்.

சரி இனியும் தாமதிக்கக்கூடாது; காவல் நிலையத்தில் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும் என்று மனதில் நினைத்துகொண்டு டூவீலரில் வேகமாக காவல்நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தான்.

அப்போது பிரபுவின் கைபேசி ஒலித்தது. டுவீலரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, ஹலோ என்றான்.

மறுமுனையில் பிரபு நான் தான் அப்பா பேசறேன்.

அப்பா எங்கப்பா போயிட்டிங்க. இப்ப எங்கப்பா இருக்கீங்க..? ஏன் இப்படி பண்ணிட்டீங்க?

பிரபு.. பதறாதே. நான் இப்ப வள்ளுவர் முதியோர் இல்லத்துல பத்திரமா இருக்கேன். நீ ஒன்னும் கவலைப்படாத.

போனை கட் பண்ணி பாக்கெட்டில் வைத்துவிட்டு நேரே முதியோர் இல்லம் நோக்கி டூவீலரில் பறந்தான்.

அங்கு அப்பாவை பார்த்து பிரபு கண் கலங்கினான்.

என்னப்பா நடந்துச்சு ….ஏம்பா இங்கு வந்தீங்க?

இல்லப்பா உங்க இரண்டு பேருக்குள்ள எந்த சண்டையும் வரக்கூடாதுன்னுதான் நான் இங்க வந்துட்டேன். மத்தபடி யாரு மேலயும் நான் குறை சொல்லல.

‘‘அப்பா ஊருல உள்ளவங்கல்லாம் என்னை தப்பா பேசுவாங்கப்பா. ஒரே பிள்ளையா இருந்துட்டு அப்பாவ ஹோம்ல சேர்த்துட்டான்னு பேசுவாங்கப்பா. தயவு செஞ்சு என்னோட புறப்பட்டு வீட்டுக்கு வாங்கப்பா’’.

இல்லப்பா எனக்கு இதுதான் சவுகரியமா தெரியுது. அதனால என்ன . இதுக்காக நீ வருத்தப்படாதப்பா .இங்க நிறைய பேர் அப்படிதானப்பா இருக்காங்க. அவுங்களோட பழகிகிட்டு சந்தோஷமா இங்கேயே இருக்கேம்பா.

எவ்வளவோ வற்புறுத்தியும் தனது மகனுடன் தாமோதரன் செல்லவில்லை.

பிரபு வருத்தத்தோடு வீடு திரும்பினான்.

மாதாமாதம் முதியோர் இல்லத்தில் தங்கி இருப்பவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு பார்ப்பதற்கு தனியார் மருத்துவமனையிலிருந்து 2 செவிலியர்கள் வருவார்கள்.

இந்த மாதம் புதிதாக 2 செவிலியர்கள் வந்திருந்தனர். இல்லத்தில் தங்கியிருந்தோர் ஒவ்வொருவராக வரிசையில் நின்று பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.

தாமோதரன் தன்னுடைய முறை வந்ததும் பரிசோதனை செய்ய வந்திருந்த செவிலியர்களில் ஒருவரை ஏற்கனவே அறிமுகம் ஆனவர் போன்று பார்த்தார். பதிலுக்கு அந்த செவிலியரும் பார்த்தார். இருவரது கண்களும் படபடவென்று அடித்து கொண்டன.

40 வருடங்களுக்கு முன்பு நர்ஸ் லலிதா தெருவில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த போது தெரு நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டு லலிதாவின் மிதிவண்டியில் வந்து விழுந்தன. எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவத்தில், மிதிவண்டியோடு லலிதாவும் கீழே சாய்ந்து வீழ்ந்து கிடக்க அவ்வழியே வந்த தாமோதரன் ஓடிச் சென்று லலிதாவை தூக்கிவிட்டு மிதிவண்டியை சரிசெய்து கொடுக்க இப்படியே உருவான காதல் 6 ஆண்டுகள் நீடித்த நிலையில் இருவரின் பெற்றோர்களின் கடும் எதிர்ப்பால் காதல் கை கூடாமல் போனது.

இதற்கிடையே லலிதாவுக்கு மாற்றல் வந்து சென்னைக்கு சென்றுவிட்டாள்.

தாமோதரன் வேறு வழியில்லாமல் பெற்றோர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ள நேரிட்டது.

லலிதா தொடர்ந்து சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளிலேயே மாறி மாறி தொடர்ந்து பணி புரிந்ததால் தாமோதரனோடு எவ்விதமான தொடர்பும் இல்லாமல் போனது.

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது லலிதாவையும் தொட்டுவிட நர்சு பணியிலிருந்து ஓய்வு பெற்று சொந்த ஊருக்கே திரும்ப வந்துவிட்டாள்.

பணி ஓய்வு பெற்றாலும் லலிதா தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் பொழுது போக்கிற்காகவும் ஆரோக்கியமாக இருப்பதற்காகவும் செவிலியராக சேர்ந்து இருந்தாள்.

முதியோர் இல்லத்தில் அனைவரையும் பரிசோதித்து முடிப்பதற்கு மதியம் 2 மணிக்கு மேல் ஆகிவிட்டது. பரிசோதனை முடிவுதான் 2 நாட்களுக்கு பிறகு கிடைக்கும் என்று தெரிவித்துவிட்டு செவிலியர் இருவரும் புறப்பட்டுவிட்டனர்.

மதிய உணவுக்கு பின், தாமோதரன் சிறிது நேரம் படுத்து ஒய்வெடுப்பார். படுத்துக்கொண்டே இன்று பரிசோதனைக்கு வந்தது லலிதா போன்று இருந்ததாக எண்ணிப்பார்த்தார். அவருக்கு பழைய நினைவுகள் சுழன்றன.

காதலி லலிதாவுடன் பார்க், கோவில், தியேட்டர் என்று பல்வேறு இடங்களுக்கு சுற்றித் திரிந்ததையும் அவள் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்ததையும் நினைத்து பார்த்து கொண்டார்.

வீட்டுக்கு தெரியாமல் சுற்றுலா என்ற பெயரில் கொடைக்கானலுக்கு சென்றது. இப்படியான நினைவுகளில் முழ்கிவிட்டார்.

இங்கு வந்தது லலிதா தானா! இல்லை வேறு நபரா? என்ற குழப்பமும் அவருக்கு வந்து விட்டது. 2 தினங்கள் கடந்தன. முதியோர் இல்லத்தில் தங்கியிருப்பவர்களின் பரிசோதனை விபரங்களுடன் லலிதா மட்டும் முதியோர் இல்ல நிர்வாகியை சந்தித்து அதன் விபரங்களை கொடுத்துவிட்டு தான் தாமோதரனிடம் தனியாக பேச வேண்டும் என்றும் அனுமதி கேட்டார். நிர்வாகியும் தாமோதரனை அழைத்து வருமாறு உதவியாளரிடம் கேட்டுக் கொண்டார்.

தாமோதரனை கண்ட லலிதா என்னை உங்களுக்கு தெரியுதா? என்றாள்.

லலிதா கேட்டதும் தாமோதரனின் கண்களிலிருந்து கண்ணீர் அப்படியே தாரைத் தாரையாய் கொட்டியது.

லலிதா உன்னோட ஞாபகம் இருக்கிறதாலதான் என் ஒரே பொண்ணுக்கு லலிதான்னு பேரு வச்சிருக்கேன் .எப்படி உன்னை என்னால மறக்க முடியும்? சந்தர்ப்பத்துல நாம் பிரிஞ்சுட்டோம்!

அப்பா, அம்மா எதிர்ப்பை மீறி உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியாம போயிருச்சு! அதுக்காக உன்கிட்ட இப்ப நான் மன்னிப்பு கேட்கிறேன். என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லு லலிதா!

அத விடுங்க. எதுக்கு நீங்க இந்த ஹோம்ல வந்து இருக்கீங்க. உங்க மனைவி இறந்தது தெரியும். உங்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறதும் தெரியும்! ஏன் அவுங்க 2 பேரும் உங்கக்கிட்ட அன்பா இல்லையா!

அவுங்க 2 பேரும் எம்மேல பாசமாத்தான் இருக்காங்க .நான்தான் அவுங்களுக்கு சுமையா இல்லாம இங்க

வந்துட்டேன் . என் கதை இருக்கட்டும்! உனக்கு எத்தனை குழந்தை? கணவர் என்ன பண்றார்?

கல்யாணம் பண்ணாம குழந்தை எப்படி?

என்ன! உனக்கு கல்யாணம் ஆகலையா! ஆமாம் உங்களுக்கு பிறகு வேற யாரையும் எனக்கு திருமணம் செஞ்சுக்க புடிக்கலே. இந்த நர்சு வேலையிலேயே என்ன முழுசா ஒப்படைச்சிட்டேன். எங்க அப்பா அம்மாவுக்கு ஒரே மகளா இருந்ததால எம் மேலே அளவுக்கதிமா பாசத்தை வைச்சிட்டாங்க . அதனால கடைசி வரை அம்மாவையும் அப்பாவையும் பார்த்துகிட்டேன். இப்ப 2 பேருமே இறந்துட்டாங்க. அதனால கல்யாணம் பண்ணிக்க எனக்கு சிந்தனையில்ல. அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றாலும் என்னுடைய சமூக சிந்தனையினால் நர்ஸ் வேலையை தனியார் மருத்துவமனை மூலமா தொடரலாம்னு முடிவு செஞ்சிட்டேன். ஆனா எதிர்பாராம இங்க உங்கள நான் சந்திச்சேன். சந்திச்சதிலேருந்து என் மனசுல உங்கள பத்திய சிந்தனை தான் ஒடிகிட்டேயிருக்கு என்றாள் லலிதா.

லலிதா சொல்வதையே கேட்டு கொண்டிருந்த தாமோதரன் அதிர்ச்சியான ஆச்சரியத்தோடு லலிதாவையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரது கண்களிலிருந்து அவரையும் அறியாமல் கண்ணில் நீர் வழிந்து கொண்டிருந்தது.

மீண்டும் லலிதாவே தொடர்ந்தாள்:–

மனைவியை இழந்த நீங்க தடுமாற்றத்தோட இருக்கீங்கன்னு எனக்கு தெரியும்! அதனால செவிலியர் சேவையோட என் இறுதிக் காலம் வரை உங்களுக்கும் சேவை செய்யணும்னு முடிவு பண்ணிட்டேன். என்னோட வீட்டுக்கு உங்களையும் நான் அழைச்சிட்டு போறதுக்கு நிர்வாகி கிட்ட அனுமதி கேட்கப்போறேன். அதுக்கான கடிதத்தை என் கையோட எழுதி எடுத்துகிட்டு வந்துருக்கேன் என்று லலிதா சொன்ன போது ….

தாமோதரன் மனமகிழ்ச்சி அடைந்து மவுனமாகித் தலையை ஆட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *