சிறுகதை

இன்றைய ஆதங்கம்! – இரா. இரவிக்குமார்

சுசீலாவின் தாத்தா சங்கரின் சதாபிசேகத்திற்கு யாரும் எதிர்பாராமல் வந்திருந்த ரகு, அந்த முதிய தம்பதியர் கால்களில் நெடுஞ்சாங்கிடையாக விழுந்து வாழ்த்த வேண்டியபோது அங்கிருந்த அனைவரும் ஆச்சரியமும் ஆதங்கமும் கொண்டு திக்குமுக்காடிப் போனார்கள்.

“ எல்லா வளமும் நலமும் அடைஞ்சி நீ பெரு வாழ்வு வாழணும்டா!” என்று சொல்லி அவனை வாரித் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டார் தாத்தா.

ரகு வேறு யாருமல்ல! சங்கரின் பேத்தி சுசீலாவை மணந்தவன். தற்போது பேத்திக்கும் அவனுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்த பேத்தியால் விவாகரத்து கோரப்பட்டு அயோக்கியன் கொடுமையானவன் என்று உற்றார் உறவினர் அனைவராலும் அறியப்பட்டவன்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சுசீலா ரகுவைக் காதலித்துக் கைப்பிடித்தவள். அதைவிடத் தாத்தாவிற்குப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அவர்களின் திருமணம் முடிந்து ஆறு மாதத்திற்குள் அவர்களிடையே பிணக்கும் பிரிவும் எப்படி ஏற்பட்டன என்பதுதான். தன் மனைவியும் தானும் எத்தனையோ சண்டைகள் போட்டிருந்தாலும் இந்த அளவுக்கு வெறுப்பும் கோபமும் பிரிந்துபோகும் எண்ணமும் கொண்டதில்லையே! வாழ்க்கையில் கோபதாபங்கள் வரும் போகும்! அவை நம் வாழ்க்கையைச் சிதைப்பதற்கும் சீரழிப்பதற்கும் அனுமதிப்பது யார் குற்றம்? ‘சிந்திக்காமல் உணர்ச்சி வேகத்தில் செயல்படும் இளைய தலைமுறையினரின் பொறுமையின்மையே இந்த நிகழ்காலத் துன்பத்திற்குக் காரணம்’ என்று அவர் நம்பினார்!

எங்கோ இந்த இளைய தலைமுறையினர் பெரியவர்களின் கட்டுப்பாடு நல்ல அறிவுரை போன்றவைகளை விட்டு விலகி தாங்களே தன்னிச்சையாகப் பொறுப்பற்றப் பொருந்தாத முடிவுகளைப் பொறுமையின்றி எடுக்கப் பழகிவிட்டார்கள். ஒருவர் செய்த பிழையே மற்றவருக்கு முன் உதாரணமாகி அதுவே சரி என்ற மாயையும் உருவாகியுள்ளது.

எல்லாவற்றையும்விடப் பெரிய கொடுமை அதைத் தட்டிக் கேட்கவும் தவிர்க்கப் புத்தி சொல்லவும் வேண்டிய பெற்றோரும் பெரியவர்களும் அந்த மாயக் கொடுமைகளுக்கு அடிபணிந்து வெறும் பார்வையாளர்களாக மாறியதுதான். மிகுந்த துன்பம் தரும் நிலைமையை உருவாக்கியுள்ளது!

இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்த்தாரோ என்னவோ சங்கர் தன் மகனையும் மருமகளையும் பேத்தியையும் ரகுவுடன் சேர்ந்து அங்கே போட்டோ, வீடியோ எடுக்க அழைத்தார்.

அங்கு வந்து கூடியிருந்தவர்கள் கவனம் தன்பால் திரும்பும் வண்ணம் அவர்களை உரக்க அழைத்துத் தன் எண்ணத்தைச் சொன்னார். அதற்கு அவர்கள் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்று எதிர்பார்த்தார். அதுதான் நடந்தது.

“நடந்த எதையுமே மனசில வெச்சுக்காம ரகு வந்திருக்கான். ஞாயப்படி அவன அவன் அப்பா அம்மாவை அவங்க வீட்ல போய் முறையா கூப்பிட்டிருக்கணும். நான் எவ்வளவோ சொல்லியும் நீங்க கேட்கல. இப்ப வந்திருக்கறவனையும் வான்னு சொல்லாம அவமானப்படுத்துறீங்க! இப்பவும் நான் சொல்றத கேட்காம நீங்க பண்றதுதான் சரிங்கற மாதிரி நடந்துகறீங்க! ஏண்டா… வாசு, நீயாவது பேசி இவங்க பண்ற அநியாயத்தை எடுத்துச் சொல்லி நல்லது ஏதாவது நடக்கணும்னா இதவிட்டா வேற சந்தர்ப்பம் கிடைக்காதுனு புரிய வையேண்டா!” என்று அங்கு வந்திருந்த தன் நெருங்கிய நண்பனும் வழக்கறிஞருமான வாசுவைத் தன் துணைக்கு அழைத்தார் சங்கர்.

“ஏம்மா… சுசீலா, நீ அப்பா அம்மாவோட இங்க வா. அப்படி என்ன பிரச்னை உனக்கும் உன் புருசனுக்கும்? எங்கிட்டகூட இதுவரைக்கும் எதயும் நீ பேசினதில்ல. நானும் ஒரு வக்கீலுங்கறது உனக்குத் தெரியுந்தானே?”

இம்மாதிரி சூழ்நிலை ஒன்று உருவாகத்தான் சங்கர் ஆசைப்பட்டார். தான் எதிர்பார்ப்பதுபோல் எல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கையும் கொண்டார். தனக்காக வந்திருக்கும் உற்றார் உறவினர் சபையில் மனம்விட்டுப் பேசினால் எந்தப் பிரச்னைக்கும் முடிவு உண்டு என்று அவர் நம்பினார். தான் பேச நினைப்பதையும் நல்லது நடக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதையும் தன் நண்பன் எப்படியும் செய்துமுடிப்பான் என்று அவர் நம்பினார்!

“அங்கிள், நீங்க டிவோர்ஸ் கேஸ் எடுக்க மாட்டீங்கனு எனக்குத் தெரியும். அதான் உங்ககூட நான் எதுவும் பேசல!” என்றாள் சுசீலா சற்றுக் கிண்டலாக அவர் கேட்ட கேள்விக்கு.

“ஆமா, அதை ஒரு தார்மீகக் கொள்கையா வச்சிருக்கேன்! அதுக்காக நீ அங்கிளுங்கற முறையில எங்கிட்ட இதப்பத்தி எதுவுமே பேசாதது சரியா? என்னால உனக்குச் சரியான அட்வைஸ் தரமுடியாதுனு நினச்சியா?”

முதன்முதலாக எங்கோயோ எதிலோ தான் தவறு செய்துவிட்டோமோ என்ற எண்ணம் சுசீலாவின் மனதில் உண்டானது. அவள் தடுமாற்றத்தை உணர்ந்துகொண்ட வாசு அவளின் பதிலை எதிர்பார்க்காமல் அதே நேரத்தில் தன் நண்பன் சங்கரின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதுபோல் பேசினார்:

“நீ செஞ்ச பெரிய தப்பு! யாரிடமும் கலந்து பேசாம உன் புருசனப் பிரிஞ்சி அப்பா அம்மா வீட்டுக்கு வந்தது, அதுக்கப்புறம் யாரையும் இதப்பத்தி சமாதானம் பேசவோ எடுத்துச் சொல்லவோ அனுமதிக்காதது, என்ன நடந்தது எதுக்குப் புருசனோடு சண்டை வந்ததுங்கறத யாரிடமும் சொல்லாம விவாகரத்து வேணும்னு லாயர் நோட்டீஸ் அனுப்பினது… எல்லாத்துக்கும் மேல விவாகரத்துதான் கணவன் மனைவி சண்டைக்குத் தீர்வுனு நினைக்கறது!”

தாத்தாவின் சதாபிசேகத்தில் இப்படித் தான் எடுத்த எதேச்சையான முக்கியமான முடிவுகள் வந்திருந்த அனைவரின் முன்னாலும் அம்பலம் ஏறும் என்பதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அங்கு வந்திருந்த பலருக்கு ஆறே மாதத்தில் திருமணமான சுசீலாவுக்கும் அவள் கணவனுக்கும் இடையே அப்படி என்ன பிரச்னை அதுவும் பிரிந்து வாழும் அளவுக்கு என்ற கேள்வி அவர்களுக்குள் எழாமல் இல்லை. இப்படி திடுதிப்பென்று சங்கரும் வாசுவும் அந்தப் பிரச்னையைச் சபையில் எழுப்ப அவர்கள் மேலே என்ன நடக்கப்போகிறதென்பதை ஊன்றிக் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

“அங்கிள் நீங்க நினைக்கற மாதிரி நான் என் முடிவை அவசரப்பட்டோ ஆத்திரப்பட்டோ எடுக்கல. ரகு எனக்குச் செஞ்ச அப்பட்டமான துரோகத்தை அநியாயத்தைத் தீர விசாரிச்சுத் தெரிஞ்சபின்தான் நீங்க என் மேல சொன்ன அத்தனையும் பண்ணேன். அவரப் பிரிஞ்சாதான் நான் நிம்மதியா வாழ முடியுங்கற முடிவுக்கு வந்தேன்!”

வாசு தன் அனுபவத்திலிருந்து ஒருவர் பேசுவதை நம்பி எந்த முடிவுக்கும் வரக்கூடாது என்ற உண்மையை அறிந்தவர். குற்றம்சாட்டப்பட்டவனும் சில நேரங்களில் நிரபராதியாக இருப்பதைத் தன் வழக்கறிஞர் வேலையில் கண்கூடாகப் பார்த்தவர். எனவே ரகுவிடம் அப்படி என்ன கொடுமையை அவன் சுசீலாவுக்குச் செய்தான் என்று அவனிடம் நேரடியாகக் கேட்டார்.

அவன் சொன்ன பதில்தான் அவர்களைப் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!

“அங்கிள், சுசீலா ஏன் எங்க வீட்டைவிட்டு வெளியே வந்தா… அப்படி நான் என்ன துரோகம் பண்ணினேன்னு எனக்கு ஒண்ணும் தெரியல!” என்றான்.

“அங்கிள் இப்படி நடிச்சுதான் என்னை ஏமாத்தினாரு. எனக்குத் தெரியாம இன்னொருத்தியோட இவருக்குத் தொடர்பு இருக்குது. நாங்க வீடு வாங்கணும்னு பேங்க்ல ஓபன் பண்ணின எங்க ஜாய்ன்ட் சேவிங்ஸ் அக்கவுன்ட்ல எட்டு லட்சம் ரூபாய் இருந்திச்சு. அத ஒரே நாளில் அவ அக்கவுன்ட்டுக்கு மாத்திட்டாரு. தற்செயலா அன்னிக்கி பேங்க்குக்குப் போன நான் விஷயத்தைக் கேட்டுத் தெரிஞ்சி ஆடிப்போயிட்டேன். அப்பதான் இனிமே இவர்கூட வாழ முடியாதுனு கிளம்பி வந்துட்டேன்!”

“ஓ… அதனாலதான் நீ கிளம்பி வந்துட்டியா?” என்று கேட்ட அவன் பெரிதாகச் சிரித்தான்.

“என்னப்பா சிரிக்கிறே… யார் அவ? எட்டு லட்சம் பொண்டாட்டிக்குத் தெரியாம கொடுக்கற அளவுக்கு அவ முக்கியமானவளா?” என்று சற்றே கடுப்புடன் கேட்டார் வாசு.

“அங்கிள், விஷயம் ரொம்ப சிம்பிள்! அவ என் ஸ்கூல் மேத்ஸ் டீச்சர் சோமசுந்தரத்தின் மகள். அவளுக்கு வெளிநாட்ல மேல்படிப்புக்குப் பல்கலைக்கழகம் ஒண்ணில இடம் கிடைச்சிருக்குது. அவளுடைய பேங்க் அக்கவுன்ட்டில் அவளுக்குப் படிக்க ஆகும் செலவை எதிர்கொள்ள அதற்குண்டான பணம் அவளிடம் இருக்குதா என்பதற்கு ஆதாரம் கேட்டார்கள். அவ்வளவு பணம் ஏதாவது ஒரு நாளில் அவளிடம் இருப்பதாக பேங்க் பாஸ்புக்கின் ஜெராக்ஸ் காப்பியைக் காட்டினால் அவர்களுக்குப் போதும். அதற்குத்தான் அந்தப் பணத்தை நான் அவள் கணக்கில் ஒரு நாள் மட்டும் டெபாஸிட் பண்ணித் திருப்பி வாங்கிட்டேன்.”

சொல்லி முடித்தவன் அதை உறுதி செய்யத் தன் ஆசிரியருடன் செல்போனில் பேசினான்…

“சார், எல்லாம் நல்லபடியா நடந்ததா… அங்க போய் ஜாய்ன் பண்ணிட்டாங்களா?”

“ஆமாம்… ரகு நீ எட்டு லட்சம் கொடுத்து உதவுனதை என்னிக்கும் மறக்கமாட்டேன்!”- ஸ்பீக்கர் ஆன்பண்ண அவன் செல்லில் ஆசிரியரின் குரல் தெளிவாகக் கேட்டது.

மேலும் தான் சொன்னதுக்கு ஆதாரமாக அவனிடமிருந்த பேங்க் பாஸ்புக்கில் எட்டு லட்சம் ரூபாய் மறுநாளே திரும்ப வரவு வைக்கப்பட்டிருந்ததையும் காட்டினான்.

“சுசீலா, என் நண்பர்கள் சிலர் இம்மாதிரி சொல்ல நானும் கேட்டிருக்கிறேன். ரகு, ஆனா இந்த ஆசிரியரின் மகள் மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல்?”

“அங்கிள், ஸ்கூல் பப்ளிக் ஃபைனல் எக்ஸாம் நெருங்கியபோது டைபாயிட் காய்ச்சல் வந்து பரீட்சை எழுதுவேனா மாட்டேனா என்ற நிலைமை உருவானது. சோமசுந்தரம் சாரும் மற்ற இரண்டு ஆசிரியர்களும் எங்க வீடு தேடிவந்து குழப்பத்திலிருந்த என் அப்பாவிடம் என்னை எக்ஸாம் எழுத அனுப்பும்படியும் எனக்குப் சிறப்புப் பயிற்சி அளித்து என்னை உற்சாகம் கொள்ளும்படியும் மாற்றினார்கள்! அவர்களின் உதவியை நான் என்றும் மறக்க முடியாது! அதற்குக் கைமாறாகத்தான் அவர் மகளுக்கு நான் உதவினேன். அது தப்பா?”

தன் மனைவியின் சந்தேகத்தை அவன் அந்தக் கேள்வியால் தகர்த்தெறிந்து அவளது அறிவீனமான செயலுக்காக அவளைத் தலைகுனியும்படி செய்தான்!

“ஆமா… எனக்கொரு சந்தேகம்… ரெண்டு மாசமா உன்ன விட்டுப் பிரிஞ்சிவந்த சுசீலாவை வந்து பார்க்கவோ, என்ன காரணத்துக்காக அப்படி பண்ணினானு கேட்கவோ இல்லை?”

“அங்கிள், நான் ஆடிட்டிங் வேலைக்காக வெளியூர் போயிருந்தேன். இவ கோவிச்சுட்டு வந்தது எனக்குத் தெரியாது. அப்புறம் தாத்தாவின் சஷ்டியப்தபூர்த்திக்கு வீட்ல போய்க் குறைஞ்சது ஒரு மாசமாது தங்குவேனு சொல்லிட்டிருந்தா… இப்படி ஓர் எண்ணத்தோட வந்திருப்பானு எனக்குத் தெரியவே தெரியாது!” என்றான் ரகு.

தான் எழுப்பிய சந்தேகங்கள் எல்லாம் தவிடுபொடியாக… சுசீலாவிற்கு

‘இன்றைய தலைமுறையினரும் தானும் பெரியோர்களைப் பார்த்து நல்லதைக் கற்றுக்கொள்ளத் தவறிவிட்டோமோ என்ற ஐயம் அவள் மனதில் தோன்றியது!’

முதியவர்கள், பெரியவர்கள், பெற்றோர்கள் இளைய தலைமுறையிலிருந்து மாறுபட்டு வேறுபட்டிருப்பதை அவளால் இப்போது உணரமுடிந்தது. அவர்களின் தங்களைப்பற்றிய ஆதங்கம் நியாயமானது என்பதும் அவளுக்குத் தெளிவானது.

தன் தாத்தா, அவரின் நண்பர் வாசு இந்த வயதிலும் எவ்வளவு நிதானமாக நியாயத்தைப் பேசுகிறார்கள். தான் அவர்களுடனோ பெற்றோர்களுடனோ இந்த நாள்வரை எதுவும் வெளிப்படையாகப் பேசாமல் புருசனைவிட்டுப் பிரிந்துவந்த காரணத்தைச் சொல்லாமல் அழுத்தமாகவும் அழிச்சாட்டியமாகவும் மவுனம் சாதித்தபோது பொறுமையாகவும் நிதானமாகவும் நடந்துகொண்டார்கள். அத்தகைய நல்ல குணங்கள் இப்போதைய இளைய தலைமுறையினருக்கு இல்லை என்பது நிதர்சனம்.

உண்மைதான். அந்தக் காலத்தில் ‘ஏய் பொட்டப்பிள்ளை மாதிரி நட… நாளைக்குப் புருசன் வீட்ல இப்படி நடந்தா உன் கதி அதோ கதிதான்!’ என்ற வார்த்தைகள் விளையாட்டாக அறிவுறுத்தப் பயன்படுத்தப்பட்டன! இப்போது அப்படிப் பேசுவது கட்டுப்பெட்டித்தனம் காட்டுமிராண்டித்தனம் என்றாகிவிட்டது.

ஆண் பெண் சரிசமம் என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் திருமணத்திற்குப் பின் ஆணும் பெண்ணும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் அதில் பெண் அதிகமாக விட்டுக்கொடுத்தால் தவறேதும் இல்லை என்பது இப்போது இளைய தலைமுறையினரிடம் சரியாகப் போதிக்கப்படவில்லை!

சுசீலாவுக்குத் தன் தோழி ஒருத்தி பெருமையாகச் சொன்னது நினைவில் தோன்றியது. ‘எங்க மாமியார் வீட்ல அவரு என் சேலையைத் துவைத்துப் போட்டால் என்ன தப்புனு கேட்டேண்டி- அவங்க வீட்ல எல்லாரும் ஆடிப்போய்ட்டாங்க!’

சுசீலா உட்பட மற்றத் தோழிகள் அதை ஆரவாரத்துடன் வாழ்த்தி வரவேற்றார்கள்.

இப்போது நினைத்தால் தங்கள் தோழியர்களில் யாரும் ஏன் தானேகூட அந்தத் தோழியை இந்த வாஷிங் மெஷின் காலத்தில் ‘நீ உன் கணவனின் வேட்டியை வாஷிங் மெஷினில் போட்டுத் தோய்த்துக் காயப்போடத் தயாராக இருந்தாயா? நீ அப்படிச் செய்தால் கணவனும் உனக்குச் சேலை தோய்த்துக் காயப்போடாமல் எங்கே போவான்?’ என்று கேட்கத் தோன்றவில்லை.

இளைய தலைமுறையினரிடம் எதிலும் அவசரம், ஆத்திரம், பொறுப்பில்லாமை, பொறுமையின்மை, பட்டறிவுள்ள பெரியோர்களைக் கலந்தாலோசிக்காத பக்குவமின்மை எல்லாம் சேர்ந்து வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் அவர்களைத் திணறடிக்கின்றன!

“வாங்க… நம்மைச் சேர்த்து வெச்ச தாத்தா காலில நாம ஒண்ணா விழுந்து வணங்கலாம்!” என்றாள் சுசீலா.

அவர்கள் லாயர் அங்கிள் வாசுவின் காலிலும் விழுந்து வணங்க மறக்கவில்லை!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *