செய்திகள்

இன்று ரம்ஜான் பண்டிகை: தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

சென்னை, ஏப். 11–

இன்று ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வீடுகளிலும், மசூதிகளிலும் குடும்பத்துடன் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான பண்டிகை ரம்ஜான் ஆகும். ஈகைத் திருநாளாக கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதமாக வரும் ரமலான் மாதத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் நோன்பு கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் ஐந்து கோட்பாடுகளில் ஒன்றாகும்.

நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டதும் இந்த மாதம் என்பதால், மாதம் முழுவதும் 30 நாள்கள் நோன்பு மேற்கொண்டு ரமலான் திருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடந்த ஒரு மாத காலமாக உண்ணா நோன்பை கடைப்பிடித்தனர். ரமலான் பிறை 29 நாட்கள் முடிந்ததை அடுத்து ஷவ்வால் பிறை வானில் தெரிந்ததை இன்று ரமலான் கொண்டாடப்படுகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் இணைந்து கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

ரமலான் சிறப்பு தொழுகையில் மக்கள் ஏற்ற தாழ்வுகளை கலைந்து அனைவரும் சமம் என்ற சமுதாய சிந்தனையுடன் கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் நோய் நொடியின்றி நலமுடன் வாழவேண்டி தொழுகை நடைபெற்றது.

சென்னை பிராட்வேயில் உள்ள திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்த பின்னர் வெளியே வந்த அவர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதே போல் திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய மசூதியிலும் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதிலும் திரளான இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். நாகூரில் உலக பிரசித்தி பெற்ற தர்காவில் இன்று காலை நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் 3000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று மனமுருகி தொழுகையில் ஈடுபட்டனர். புத்தாடை அணிந்து பெரியோர்கள், மற்றும் குழந்தைகள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

ரமலான் பண்டிகையையொட்டி மதுரை தமுக்கம் மைதானத்தில் ஜாக் அமைப்பு சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

கோவை உக்கடம் கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய பள்ளி மைதானத்தில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

நெல்லை மேலப்பாளையத்தில் பஜார் திடல், மாநகராட்சி மைதானம், பாளையங்கோட்டை, கேடிசி நகர் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு கூட்டுத்தொழுகை நடைபெற்றது.

சேலம் சூரமங்கலம் ஜாகிர் அம்மாபாளையம் அருகில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரியிலும் சுல்தான்பேட்டை பள்ளி வாசல், ஜிம்மா மசூதி, காரைக்காலில் உள்ள பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் இன்று காலை 7 மணி முதல் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் அந்தப்பகுதிகளில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்று இஸ்லாமியர்கள் ஒருவொருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டு ரமலான் பண்டிகையை கொண்டாடினர்.

தொழுகை முடிந்து வெளியே வந்தவர்களிடம் அண்ணா தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *