சென்னை, அக். 2–
மகாளய அமாவாசையை முன்னிட்டு, காவிரி ஆற்றங்கரை மற்றும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
புரட்டாசி மாதம் அமாவாசைக்கு முன் வரக்கூடிய பெளர்ணமி திதிக்கு மறுநாளிலிருந்து அமாவாசை வரை உள்ள காலம் மகாளயபட்ச காலம் ஆகும். மகாளயபட்சமான இந்த 15 நாட்களிலும் நமது முன்னோர்கள் பூமிக்கு வந்து, தங்கள் சந்ததியினருடன் தங்கி, உணவு அருந்துகின்றனர் என நம்பப்படுகிறது.
இன்று மஹாளய அம்மாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே பல்லாயிரகணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வருகை தந்து , இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக சங்கல்பம், திதி,தர்ப்பணம் செய்து முன்னோர்களை பசி தீர்க்க பிண்டமிட்டு, கோதானம், வஸ்திர தானம், அன்னதானம் செய்து பிதுர்கர்மா பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். பின்னர் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி பின்பு நீண்ட வரிசையில் காத்திருந்து இராமநாதசாமி – பர்வதவர்த்தினி ஆம்பாளை தரிசனம் செய்து வருகின்றனர்.
ஸ்ரீ ரங்கம்
அம்மா மண்டபம்
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி கரையில் தர்ப்பணம் செய்தால் கோடி புண்ணியம் எனக்கருதுவதால் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து சிறப்பு வாய்ந்த மகாளய அமாவாசையான இன்று பல்லாயிரக்கணக்கானோர் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, ஓயாமரி எதிரே காவிரி படித்துறை என திருச்சி காவிரி கரையில் தத்தம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். சேலம் சுகவனேஸ்வரர் கோவில், நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரி ஆற்றில், பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
இதே போல் வேதாரண்யம், ஈரோடு கொடுமுடி, பவானி கூடுதுறை ஆகிய இடங்களிலும், கோயில்களிலும் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
சென்னையில் வடபழனி, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் குளக்கரையில் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.