செய்திகள்

இன்று மகாமகம்: கும்பகோணம் குளத்தில் புனித நீராடிய பக்தர்கள்

முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

கும்பகோணம், மார்ச் 6–

இன்று மகாமகத்தை முன்னிட்டு கும்பகோணம் குளத்தில் ஏராளமான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர்.

மாசி மாதம் பௌர்ணமியும் மகம் திதியும் சேர்த்து வரக்கூடிய அற்புத நாள் மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது. மாசிமகம் கும்பகோணத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாசி மகத்தன்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் புனித நீராடுவார்கள். மாசி மக திருவிழாவை முன்னிட்டு சிவன் கோவில்களில் 10 நாள் உற்சவம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான மாசி மக தீர்த்தவாரி, மகாமக குளத்தில் இன்று நடைபெறுகிறது.

மாசி மாதம் பௌர்ணமியும் மகம் திதியும் சேர்த்து வரக்கூடிய அற்புத நாள் மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது. மாசி மாதம் சிவபெருமானுக்கு மட்டுமின்றி பெருமாளுக்கும் உகந்ததாகப் பார்க்கப்படுகிறது. வைஷ்ணவர்கள் மாசி மாதம் முழுக்க அதிகாலையில் எழுந்து குளித்து, துளசியால் பெருமாளை வழிபட்டு வந்தால் அவர்களுக்கு வைகுண்ட லோகத்தை அடையும் வரம் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் மகிமையாகும். ஒரு பிரளய காலத்தின் போது பிரம்மா மிதக்க விட்ட அமிர்தம் அடங்கிய குடத்தை சிவபெருமான் ஒரு பாணத்தால் அடித்து உதைத்து விட்டார். அமிர்தம் சிதறியது. உடைந்து போன குடம் சிதறி உருண்டு ஓடியது. அந்த குடம் நின்ற இடம் தான் கும்பகோணம். சிதறிய அமிர்தம் ஒன்று சேர்ந்த இடமே மகாமக குளம்.

பாவங்களை அகற்றி

புனிதம் பெற

அமிர்த துளிகள் லிங்கமானது. அவர் தான் கும்பேஸ்வரர். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சரயு, வேகவதி, சிந்து, கோதாவரி, காவேரி, தபதி, பிரம்மபுத்திரா, தாமிரபரணி, மகாநதி முதலான நதிகள் கைலாயம் சென்று பரமேஸ்வரனை வணங்கி மக்களின் பாவங்களை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். எங்களிடம் வரும் பாவத்தை எப்படி தொலைப்போம் என கேட்டனர். அதற்கு பரமசிவன் நதிகளே! மகத்தன்று குடந்தையில் உள்ள மகாமக தீர்த்தத்தில் ஸ்நானம் செய்யுங்கள். பன்னிரெண்டு நதிகளும் மக்கள் செய்த பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற மகாமக குளத்தில் நீராடுவதாக ஐதீகம்.

கும்பகோணத்தில் 12 சிவன் கோயில்கள் மற்றும் 5 பெருமாள் கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவும். ஆண்டுதோறும் மாசி மக விழாவும் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு மாசி மக விழா 6 சிவன் கோயில்களில் கடந்த மாதம் 25ஆம் தேதியும், 3 பெருமாள் கோயில்களில் கடந்த 26ஆம் தேதியும் கொடியேற்றத்துடன் தொடங்கின. தொடர்ந்து, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. சனிக்கிழமையன்று விநாயகர், முருகன், ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மாலை சண்டிகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர் ஆகிய 4 கோயில்களில் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமானோர் தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

3 கோவில் தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்வான மாசி மக தீர்த்தவாரி, மகாமக குளத்தில் இன்று நடைபெறுவதை யொட்டி ஏராளமானோர் கும்பகோணம் நகரத்தில் குவிந்துள்ளனர். இன்று காலை 9 மணிக்கு மேல் 9.15 மணிக்குள் சக்கரபாணி, ராஜகோபால சுவாமி, ஆதி வராகப் பெருமாள் ஆகிய 3 பெருமாள் கோயில்களின் தேரோட்டமும் நடைபெற்றது. பின்னர், சாரங்கபாணி கோயில் பொற்றாமரைக் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.

இவ்விழாவில் தொடர்புடைய 12 சிவன் கோயில்களிலிருந்து காலை 10 மணிக்கு சுவாமிகள் புறப்பட்டு மகாமக குளத்தைச் சுற்றி வலம் வந்து கரையில் நிறுத்தப்படுவர். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் 12.45 மணிக்குள் குளத்தில் அஸ்ரத்தேவருக்கு அபிஷேகமும் தீர்த்தவாரியும் நடைபெறும். மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் நகரில் உள்ள சிவன், பெருமாள் கோவில்கள் மட்டுமின்றி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு கோவில்களில் நடைபெற்று வரும் பல்வேறு சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

தீர்த்தவாரியில் பங்கேற்று புனித நீராடவும் ஏராளமானோர் கும்பகோணத்தில் குவிந்து வருகின்றனர். கும்பகோணம் மகாமக குளத்தில் மாசி மகத்தை ஒட்டி ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *