செய்திகள்

இன்று பன்னீர் ரோஸ் பட்டாடையில் அத்திவரதர் காட்சி; நள்ளிரவில் நடிகர் ரஜினிகாந்த் தரிசனம்

காஞ்சிபுரம் ஆக 14–

இன்று 45வது நாளில் அத்திவரதர் பன்னீர் ரோஸ் நிற பட்டாடை உடுத்தி தாமரை மலர்கள், எலுமிச்சம் மாலை மற்றும் வண்ண வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் நின்ற கோலத்தில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 45 நாளான இன்று அதிகாலை 5 மணி அளவில் அத்திவரதருக்கு கோவில் பட்டர்கள் கற்பூர தீபாராதனை காட்டினார்கள். அப்போது சுப்ரபாதம் பாடப்பட்டது. கியூவில் நின்றிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘‘கஞ்சி வரதா கஞ்சி வரதா கோவிந்தா கோவிந்தா’’ என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள்.

மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள் வீல் சேரில் சென்று அத்தி வரதரை தரிசனம் செய்தனர்.

16ம் தேதி அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி தரும் கடைசி நாளாகும். இன்னும் 3 நாட்களே இருப்பதால் வெளிநாடு மற்றும் இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்திற்கு வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர்.

17ம் தேதி வேத விற்பன்னர்கள், பட்டாச்சாரியார்கள் விசேஷ மந்திரங்களை ஓதுவார்கள். அன்று மாலைக்குள் அத்திவரதரை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் பத்திரமாக உள்ளே வைப்பார்கள். இதற்காக 40 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் குளத்தை சுத்தம் செய்யும் பணியின் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் குளத்தை சுற்றி வர்ணம் பூசும் வேலை நடந்து வருகின்றது. மேலும் அத்திவரதரை எடுத்துச் செல்ல மூங்கில் பலகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

நேற்று ஒரே நாளில் 3.50 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்துள்ளனர் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ஆகியோர் கார் மூலம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்தனர். பிறகு அத்தி வரதரை மனமுருகி தரிசித்தனர். அவர்களுக்கு பட்டாச்சாரியார்கள் பொன்னாடை அணிவித்து துளசி மாலை, பழங்களைக் கொடுத்து அத்திவரதர் படத்தை கொடுத்தனர்.

தமிழக போலீஸ் டிஜிபி திரிபாதி உத்தரவின் பெயரில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மேற்பார்வையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பெண் போலீசாரும் தரிசிக்க வரும் பெண்களை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *