செய்திகள்

இன்று பங்குனி உத்திரம்: தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

Makkal Kural Official

சென்னை, ஏப். 11–

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி உத்திரம் என்பது தமிழ் மாதமான பங்குனியில் 12வது நட்சத்திரமாகிய உத்திரத்துடன் பௌர்ணமி இணைந்து வரும் திருவிழாவாகும்.அரிக்கும், சிவனுக்கும் பிறந்தவர் தான் அரிகரபுத்திரன் என்ற சாஸ்தா. இந்த சாஸ்தாவை அய்யனார், சாஸ்தா என்று பல பெயர்களில் அழைப்பார்கள். இந்த சாஸ்தா பங்குனி உத்திரத்தன்று தான் அவதரித்தார். இதனால் தான் பங்குனி உத்திரத்தன்று தென்மாவட்ட மக்கள், தங்களின் குலதெய்வமான சாஸ்தாவை வழிபட்டு வருகிறார்கள்.

இந்த நாள் முருகப் பெருமானுக்கு மிகவும் சிறப்பு நாள் என்பதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடத்தப்படும். இது தவிர இந்நாளில் முருக பக்தர்கள் விரதமிருந்து, பால்குடம், காவடி எடுத்து சென்று முருகனை வழிபடுவது வழக்கம்.

பங்குனி உத்திரம் நாளில் தான் சிவன்-பார்வதி, முருகன்-தெய்வானை, ராமர்-சீதா போன்ற கடவுள்களின் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் சொல்லுகின்றன. இந்நாள் சைவர்களுக்கு மட்டுமல்ல, வைணவர்களுக்கும் மிக முக்கியமான நாள் தான். முக்கியமாக இந்நாளில் விரதமிருந்து வழிப்பட்டால் திருமண தடைகள் அனைத்தும் நீங்கி, வரன் கைக்கூடும் என்பது நம்பிக்கை.

இன்று பங்குனி உத்தரவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் இருக்கும் முருகன் கோவில்களில் இன்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில்

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்தும், அலகு குத்தியும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று மாலை 4.30 மணிக்கு பழனி கிரிவல பாதையில் தேரோட்டம் நடைபெறுகிறது.

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. அதிகாலை முதலே குவிந்த திரளான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.இதைபோல திருப்பரங்குன்றம் முருகன் கோவில், திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக நடந்து வருகிறது. மேலும் சாஸ்தா கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா வைபவம் நடைபெற்று வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *