போஸ்டர் செய்தி

இன்று பக்ரீத்: தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் விசேஷ தொழுகை

சென்னை, ஆக. 22–

இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் விசேஷ தொழுகை நடத்தினார்கள்.

முஸ்லீம்களின் பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகை முக்கியமானது. இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் துல்ஹஜ் மாதம் 10ம் நாள் இந்த பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. மசூதிகள் மட்டுமின்றி பொது இடங்களிலும் முஸ்லிம்கள் ஒன்று கூடி விசேஷ தொழுகை நடத்தினார்கள்.

புத்தாடை அணிந்த இஸ்லாமிய சகோதர–சகோதரிகள் தங்கள் குடும்பத்துடன் மசூதிகள், பள்ளிவாசல்களுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் பெண்களும், குழந்தைகளும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். தொழுகை முடிந்த பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.

பக்ரீத் பண்டிகை நாளில் ஏழைகளும் இறைச்சி உணவை சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இஸ்லாமியர்கள் இறைச்சி தானம் வழங்குவது வழக்கம். ஆடு, ஒட்டகம் குர்பானி கொடுத்து ஏழைகளுக்கு இறைச்சியையும் இஸ்லாமியர்கள் இன்று தானம் செய்தனர்.

சென்னையில் திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய சகோதரர்கள் கூடி விசேஷ தொழுகை நடத்தினார்கள். இதேபோல பாரிமுனை, அண்ணாசாலை, பெரியமேடு, ஆயிரம் விளக்கு, கோடம்பாக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு மசூதிகளிலும் நடந்த சிறப்பு தொழுகையில் முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், வட ஆற்காடு, தென்ஆற்காடு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகப்பட்டினம், மதுரை, திருச்சி, கோவை, சேலம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள முக்கிய பெரிய மசூதிகளில் இஸ்லாமியர்கள் திரண்டிருந்து சிறப்பு தொழுகை நடத்தினார்கள். பரஸ்பரம் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவிலும் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

சவூதி அரேபியா, பிற வளைகுடா நாடுகள் மற்றும் ஏமனிலும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. பக்ரீத் பண்டிகையையொட்டி மெக்கா நகரில் உள்ள பெரிய மசூதியில் இன்று காலை சிறப்புத் தொழுகை நடந்தது. உலகில் அமைதி நிலவவும், முஸ்லீம்கள் ஒற்றுமையாக இருக்கவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. வளைகுடா நாடுகளைப் போன்று இன்று அமெரிக்காவிலும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *