போஸ்டர் செய்தி

இன்று நடந்த மறுதணிக்கையில் சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்

சென்னை,நவ.9–

நடிகர் விஜய் நடித்த சர்கார் படம் இன்று மறுத்தணிக்கை செய்யப்பட்டது. அப்போது சர்ச்சைக்குரிய காட்சிகள் முழுவதும் நீக்கப்பட்டது. புதிய காட்சிகள் எதுவும் சேர்க்கப்படவில்லை. மறுதணிக்கை செய்யப்பட்ட படம் இன்று மதியம் முதல் திரையிடப்படுகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகியது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாருக்கு ஜெயலலிதாவின் இயற்பெயர் என கூறப்படும் கோமளவல்லி எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேலும் படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி அண்ணாதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தியேட்டர் உரிமையாளர் சங்கம் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணைச்செயலாளர் ஸ்ரீதர் கூறும்போது, சர்கார் படத்திற்கான சென்சார் வேலைகள் காலை 10.30 மணி அளவில் தொடங்குவதாகவும், படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் அகற்றப்படும் என தயாரிப்பாளர்கள் உறுதி அளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

சர்கார் திரைப்படத்தில் இருந்து மிக்ஸி, கிரைண்டர், பேன் ஆகியவற்றை தூக்கி நெருப்பில் எரியும் காட்சி மற்றும் வரலட்சுமி கதாபாத்திரத்தின் பெயர் கோமளவல்லி என்பதை ஆடியோ கட் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இன்று மதியம் அல்லது மாலையில் திரையிடப்படும் காட்சிகளில் இந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெறாது எனவும் தெரிவித்திருந்தார்.

இப்படி அவர் அறிவித்துள்ள நிலையில் சர்கார் படத்தினை சென்சார் (மறுதணிக்கை) செய்யும் பணிகள் நடைபெற்றன. சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டு, மறுத்தணிக்கை செய்யப்பட்டு அதற்கான சான்றிதழை தணிக்கை துறை வழங்கியுள்ளது. இதையடுத்து இன்று மதியம் முதல் சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்ட திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இதன் மூலம் இப்பிரச்சினை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மண்டல தணிக்கை அதிகாரி லீலா மீனாட்சி தலைமையிலான தணிக்கை குழு சர்கார் படத்தினை மறுதணிக்கை செய்தது. அதில் சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டதுடன், புதிய காட்சிகள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்று தணிக்கை குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முதல்வருடன் ஆலோசனை

இந்தநிலையில் சர்கார் பட விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனை நடத்தினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

அமைச்சர் நன்றி

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்க படக்குழு ஒப்புக் கொண்டதற்கு நன்றி. படக்குழுவின் இந்த முடிவை வரவேற்கிறேன். இனிவரும் காலங்களில் அரசியல் நோக்கத்தோடு சர்ச்சைக்குரிய காட்சிகளை வைக்க வேண்டாம். அரசின் இலவச திட்டங்களை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை. விஜய் ரசிகர்களின் வீடுகளிலும் அரசின் விலையில்லா பொருட்கள் உள்ளது என்றார்.

செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-–

விஜய் நல்ல நடிகர், எதிலும் முத்திரை பதிக்க வேண்டும் என நினைப்பவர். ஆனால் சர்கார் படத்தில் மக்கள் நல திட்டங்களை எரிக்கும் காட்சியில் நடிகர் விஜய், முருகதாஸ் நடித்தது மன்னிக்க முடியாத குற்றம். ஜெயலலிதா இருக்கும்போது மக்கள் நல திட்டங்களை வாழ்த்தி பேசிய விஜய், இப்போது படத்தில் எதிர்க்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

விஜய் ரசிகர்கள் மீது வழக்கு

சர்கார் படத்திற்கு அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக திருவாரூரில் விஜய் ரசிகர்கள் 21 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதே போன்று தஞ்சை மாவட்டத்தில் அனுமதியின்றி சர்கார் பட போஸ்டர் ஒட்டியதாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம் மணப்பாறையில், உரிய நேரத்திற்கு பிறகும் சர்கார் படபேனர்களை அகற்றாததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை ஜூபிடர், சாந்தி, கமலா ஆகிய தியேட்டர்களில் சர்கார் படத்தின் காலை மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்க்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடக்கும் என அண்ணாதிமுகவினர் அறிவித்துள்ளதால் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்

சர்கார் படத்தின் பிரச்சினை தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஆளும் அண்ணாதிமுக அரசை தாக்குவதுபோல் அமைந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்குமாறும், இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், சர்கார் படத்துக்காக வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு பகுதிகளில் அண்ணாதிமுகவினர் சர்கார் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சர்கார் படம் ஓடும் திரையரங்குகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நேற்று நள்ளிரவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு போலீஸ் வந்ததால், முன் ஜாமீன் கோரியுள்ளார். இந்த மனு பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *