சென்னை, பிப். 11–
இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் முருகன் கோவில்களில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படும் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக தைப்பூசம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நன்னாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் தைப்பூசம் இன்று தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 5ம் தேதியே தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டு முருகன் ஆலயங்கள் களைகட்டத் தொடங்கியது. இந்த நிலையில், இன்று தைப்பூசம் என்பதால் காலை முதலே முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களும், வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
பழனி, திருச்செந்தூர்
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. முன்னதாக இன்று அதிகாலை சண்முகநதியில் தீர்த்தவாரி நடைபெற்றது. இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கும் தேரோட்டத்தில் கலந்துகொள்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் நெரிசலை கட்டுப்படுத்த அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டது.
திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா இன்று நடைபெறுவதையொட்டி, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட பூஜையும் பின்னர் மற்ற கால பூஜைகளும் நடைபெற்று வருகின்றது. இன்று முருகனைத் தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக, அதிகாலை முதலே நீண்ட வரிசையில், பல மணி நேரமாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதே போல் திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, சுவாமிமலை, திருத்தணி உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகளிலும், அறுபடை வீடுகள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.