போஸ்டர் செய்தி

இன்று உலக மக்கள் தொகை தினம்: பெசன்ட் நகர் பீச்சில் விழிப்புணர்வு பேரணியை துவக்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர்

Spread the love

சென்னை, ஜூலை 11
இன்று (11–ந் தேதி) உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளித்தார்.
உலக மக்கள் தொகை தின துண்டு பிரசுரங்கள் வெளியிட்டு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி, செவிலிய மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மாபெரும் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:-
அம்மாவின் அரசு குடும்ப நலத்திட்டத்தை செயல்படுத்துவதில், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் நாட்டிலேயே தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவின் மக்கள் தொகை 136.8 கோடி, தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 8.12 கோடி. தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் 14.9 / 1000 மக்கள் தொகைக்கு தமிழ்நாட்டின் மொத்த கருவள விகிதம் 1.6 (தேசிய அளவிலான கருவளை விகிதம் 2.3 ஆகும்). தமிழகம் தான் இந்த தேசிய அளவிலான இலக்கை முன்னரே அடைந்துள்ளது. இதே நிலையில் நீடித்து வருவது பாராட்டுக்குரியது.
தமிழ்நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.83%, இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 6% ஆகும். உயர் பிறப்பு வரிசை (3 மற்றும் அதற்கு மேற்பட்ட வரிசை பிறப்பு) 2010–ம் ஆண்டு -10.6% தற்போது 7.2% ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு துணை சுகாதார மையங்கள் முதல் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் வரை தமிழகம் முழுவதும் 13,711 மருத்துவ மையங்களில் குடும்ப நல சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பெண்கள் குடும்ப நல அறுவை சிகிச்சை – 30.50 லட்சம், கருத்தடை வளையங்கள் பொருத்திக்கொண்ட தாய்மார்கள் – 36.50 லட்சம். இதன் மூலம் இதுவரை சுமார் 2 கோடி பிறப்புகள் தடுக்கப்பட்டுள்ளது.
3 மாதங்களுக்கு ஒரு முறை ‘மெட்ரோக்சி புரொஜெஸ்ட்ரோன் அசிடேட்’ என்ற புதிய கருத்தடை ஊசி முறை தமிழகத்தில் 2017 செப்டம்பர் மாதம் தொடங்கப்பபட்டு இதுவரை 48,564 தாய்மார்கள் பயனடைந்துள்ளனர். வாரம் இருமுறை மட்டுமே எடுத்துக் கொள்ளக்கூடிய புதிய தற்காலிக கருத்தடை மாத்திரைகளான சென்ட்ரோமன் (சாயா) மூலம் இதுவரை 92,589 பெண்கள் பயனடைந்துள்ளனர்.
அரசு மருத்துவ நிலையங்களிலும் கடந்த 5 ஆண்டுகளில் 3,31,150 தாய்மார்களுக்கு இலவசமாக மருத்துவ ரீதியான கருக்கலைப்பு இலவசமாக தற்போது புறநோயாளி பிரிவுகளில் செய்யப்பட்டுள்ளது. உறுஞ்சு குழல் உதவி முறையில் 1255 மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் பிரிவில் கருக்கலைப்புக்கான மருத்துவ முறையை நடைமுறைப்படுத்தி பாதுகாப்பாக கருக்கலைப்பு முறையை தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் கருக்கலைப்புக்கான மருத்துவ முறை மாத்திரைகளும் அனைத்து அரசு மருத்துவ நிலையங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேவையற்ற கர்ப்பங்கள் தவிர்க்கப்படுகிறது. உயர் பிறப்பு விகிதம் அதிகமுள்ள 21 மாவட்டங்களில் 120 வட்டாரங்களை கண்டறிந்து, சிறப்பு குடும்ப கட்டுப்பாடு முகாம்கள் ரூ.2 கோடியே 16 லட்சம் மதிப்பில் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுவரை 680 முகாம்களில் 4597 தாய்மார்கள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 80.4% தாய்மார்கள் இரண்டு குழந்தைகளுக்கு பிறகு குடும்பநல அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர். அனைத்து விதமான குடும்ப நல சேவைகள் அதாவது நிரந்தரம் மற்றும் தற்காலிக முறைகள் உள்ளன. அவற்றில் தாய்மார்களின் விருப்பப்படி சேவையை தேர்ந்தெடுத்து பலன் அடையலாம்.
அரசு மருத்துவ நிலையங்களில் பிரசவத்திற்குப்பின் 48 மணி நேரத்திற்குள் கருத்தடை வளையம் பொருத்திக் கொள்ளும் தாய்மார்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.300 வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றிற்கு 7.5 கோடி ரூபாய் செலவிடப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மத்திய அரசின் குடும்ப நலத்துறை மண்டல இயக்குனர் ரோஷினி அர்தர், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத் துறை இயக்குநர் குழந்தைசாமி, மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, குடும்ப நலத்துறை இயக்குநர் (பொ) ஹரி சுந்தரி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் சுவாதி, இணை இயக்குநர் இந்துமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *