சிறுகதை

இன்பம்

Spread the love

சிறுகதை கோவிந்தராம்

அந்த சிறப்பான பள்ளியில் இறுதித் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.
விழாத் தொடக்கமாக சில கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் கலைத் திறமைகளை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சிகள் யாவும் திரைப்பட பின்னணி கொண்டவைகளாவர். ஆங்கில நிகழ்ச்சிகள் ஷேக்ஸ்பியரின் நூல்களைத் தழுவியும் இருந்தன. நாட்டிய நிகழ்ச்சிகள் மேலைநாட்டு இசைக் கலாச்சாரத்துடன் நடந்தன.
சிறு இடைவெளிக்கு பிறகு பிரிவு உபசார விழா ஆரம்பமானது.
கலை விழாவில் பங்கு கொண்டவர்களுக்கும் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கும் தலைமை விருந்தினர், பதக்கங்களையும் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.
முதல் பரிசு பெற்ற மாணவியை அழைத்து அவள் படித்து முதல் மதிப்பெண் பெற்ற பாடத்தில் ஒரு கேள்வியை கேட்டார். அந்தப் பெண் பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றாள்.
கூட்டத்தில் இருப்பவர்கள் யாராவது பதில் சொல்ல முடியுமா என்றார் .
ஒரு மாணவன் மேடைக்கு வந்து சரியான பதில் சொன்னான்.
விருந்தினர் அந்த பையனுக்கு ஒரு சிறப்புப் பரிசை கொடுத்து பாராட்டினார்.
மேலும் அவர் பேசுகையில், பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் சில ஆலோசனைகளை வழங்கினார். முதலில் பிள்ளைகளுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் பள்ளிக்கு வருவது எதற்காக தெரியுமா? எல்லோருக்கும் முதல் தெய்வம் பெற்றோர்கள் தான். உயிர் கொடுத்த தந்தைக்கும் உடல் கொடுத்த தாய்க்கும் என்றும் கடமை பட்டவராக இருக்க வேண்டும். அடுத்து உங்களுக்கு அறிவு கொடுத்த ஆசிரியர்களுக்கு கடமை பட்டவர்களாக இருக்க வேண்டும். உயிர் இல்லாமல் உடல் உயிர் வாழ முடியாது. உடல் இல்லாமல் அறிவை பயன்படுத்த முடியாது. உயிர், அறிவு, இருந்தால் தான் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வாழ முடியும்.
அடுத்து பெற்றோர்களுக்கும் ஒரு வேண்டுகோள் நம் கடந்த காலம் போல் இந்த காலம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாமல் உள்ளது. தலைமுறை இடைவெளியையும் மாற்றங்களையும் நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இந்தக் காலத்து விடலைப் பிள்ளை பாலுணர்ச்சியில் மயங்கி தவறுகளை தைரியமாக செய்ய துணிந்து விட்டார்கள். அதற்காக நான் ஒரு கருத்தை சொல்ல விரும்புகிறேன்.
பருவத்தின் உணர்ச்சியால் தவறான உறவுகளை அவசரப்பட்டு எடுப்பதை தடுக்க பெற்றோர்கள் சில முடிவுகளை எடுக்கலாம். சென்ற தலைமுறையில் நடந்து வந்தது போல் இப்போதே நல்ல வரன் பார்த்து விடலைப்பருவம் முடிந்ததும் திருமணம் செய்து வைக்கலாம். அவர்களின் ஆசைகளும் அங்கீகாரம் பெற்றது போல் ஆகிவிடும்.
மேலும் இதை இன்பம், ஆசை என்று அறிந்து கொண்டால் மேலும் தவறுகள் செய்யும் அறிவே வராமல் போய்விடும்.
இருவருக்குள்ளும் தம் உறவுகளை முதல் உறவுகளாக கருதி மற்றொன்றுக்கு மனதை அலைய விடமாட்டார்கள். இது வெள்ளம் வருவதற்கு முன் அணை கட்டுவது போலாகும். இந்தக் கருத்தை சரியான நோக்கத்தில் சிந்தித்துப் பார்த்தால் சரியான முடிவு போலத் தெரியும். ஒருவனுக்கு ஒருத்தி என்பதை அவர்களுக்குப் புரிய வைத்து ஒழுக்கத்துடன் வாழ வழிவகை செய்து விட வேண்டும்.
மொத்தத்தில் இன்பம் என்பது எது என்று அறிந்து விட்டால் மனம் நிம்மதியடைந்துவிடும். உரிய நேரத்தில் ஆசைப்பட்டதும், விரும்பியதும் கிடைத்துவிட்டால் அடுத்த நிலைக்குப் போக வேண்டியும் இருக்கப்போவதில்லை. நான் இறுதியாக சொல்ல விரும்புவது ஒன்றுதான் சிற்றின்பம் என்பது தீக்குச்சி போல. இன்பம் என்பது திரிவிளக்கு போலத்தான். தீக்குச்சியால் விளக்கை எரிய வைக்க முடியுமே தவிர விளக்கின் வெளிச்சத்தை தீக்குச்சியால் தரவே முடியாது.
சிற்றின்பத்தை விட பேரின்பமே மகிழ்ச்சி தரக் கூடியது.
அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று கூறி முடித்தார் தலைமை விருந்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *