செய்திகள்

இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது: இஸ்ரேல்–ஈரான் மோதல் பற்றி ஐநா கருத்து

Makkal Kural Official

நியூயார்க், ஏப். 14–

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியிருக்கும் நிலையில், இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது என்று ஐநா பொதுச் செயலாளர் அச்சம் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனம்–இஸ்ரேல் இடையே கடந்த அக்டோபர் 7 ந்தேதி முதல் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. எஞ்சிய பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.

பாஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திய போரில் 33 ஆயிரத்து 634 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 450 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் போரில், ஹமாசுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல், சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1 ந்தேதி வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், அங்குள்ள ஈரான் தூதரகம் கடும் சேதமடைந்தது. இரண்டு தூதரக அதிகாரிகள் உட்பட 7 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

போரை உலகம் தாங்காது

இதனால் ஈரான் கடுங்கோபத்தில் உள்ளது. இந்த தாக்குதலையடுத்து எந்நேரமும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகனைகளை ஈரான் ஏவியுள்ளது. ஜெருசலேம் நகரின் சில இடங்களில் பயங்கர சத்தங்கள் கேட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானின் இந்த தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் இந்தப்போரை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன. ஐநா சபையும் தனது கவலையை தெரிவித்துள்ளது.

ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியா குட்டெரஸ் இது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார். இஸ்ரேல் மீது ஈரான் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியிருப்பதை கண்டிப்பதாகவும், இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தவதாகவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இன்னொரு போரை அந்த பிராந்தியமோ, உலகமோ தாங்காது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *