சிறுகதை

இந்த மல்லிகைப் பூவை மறைச்சு வைக்கணும்! | சின்னஞ்சிறுகோபு

எனக்கு 62 வயதுக்கு மேலாகி விட்டது.

அமெரிக்காவிலிருந்து பையனும் மருமகளும் பேரன் நவீனும் பேத்தி இந்துஜாவும் வந்திருந்தனர்.

அதனால் எனக்கு இந்த சென்னையிலிருந்து சொந்த கிராமத்திற்கு சென்று அப்படியே குலதெய்வம் அய்யனாருக்கு ஒரு அபிஷேகம் செய்துவிட்டு வரலாம் என்று தோன்றியது.

இரவில் காரில் கிளம்பி காலை 7 மணிக்கெல்லாம் சொந்த கிராமத்திற்கு வந்து விட்டோம். கிராமம் கொஞ்சம் கொஞ்சம் மாறுதல்களுடன் இருந்தாலும் எனக்கு அப்படியே இருப்பதாக தான் தோன்றியது.

கிராமத்து வீட்டைப் பார்த்ததும் பேரக்குழந்தைகளுக்கு ஒரே உற்சாகம். பெரிய ஓட்டு வீடு, வெளியே திண்ணைகள், உள்ளே ஒரு திறந்த முற்றம்; கொல்லையிலே ஒரு நீண்ட தாழ்வாரம்.

கொல்லையில் தண்ணீர் இல்லாத ஒரு கிணறு – அந்த கிணற்றின் சுவரெல்லாம் செடி கொடிகள் முளைத்துக் கிடந்தன. இப்போது கிணற்றுக்கு பக்கத்தில் போர்வெல் போட்டு தண்ணீர் வந்துக் கொண்டிருந்தது.

கிழக்கு பக்கத்தில் இப்போது மாடுகள் இல்லாத மாட்டுக் கொட்டகை. அதன் ஒரு பக்க சுவர் ஆங்காங்கே இடிந்துக் கிடந்தது. அதற்கு பக்கத்திலேயே ஒரு பலா மரம். அருகே இரண்டு செம்பருத்தி செடிகள். அதோடு கொல்லையில் ஆங்காங்கே சில தென்னை மரங்கள், வேப்ப மரங்கள், ஒரு மாமரம்.

கடைசியாக வேலியோரத்தில் ஒரு புளிய மரம். எனக்கு வீட்டுக் கொல்லை கூட அதிக மாறுதல்கள் இல்லாதது போலத் தான் தோன்றியது. அவ்வப்போது கிராமத்திற்கு வந்து போவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

பலா மரத்தில் சில பலா காய்கள் மிக கீழே கைக்கெட்டிய தூரத்திலேயே காய்த்திருந்தன. பேரக்குழந்தைகள் அதைத் தொட்டு தொட்டு ஆச்சரியத்துடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஒரு வேப்ப மரத்திலிருந்து காக்கா குருவி தொடர்ந்து கூவிக் கொண்டேயிருந்தது. ஒரு நீலநிற மீன் கொத்தியொன்று பறந்து வந்து நாரத்தை மரத்தின் கிளையில் வந்து உட்கார்ந்தது ; பிறகு குழந்தைகளைப் பார்த்து பயந்து பறந்தது.

நான் இவற்றையெல்லாம் என்னை மறந்துப் பார்த்துக் கொண்டிருந்த போது, “என்ன மசமசண்ணு நின்னுக்கிட்டிருக்கீங்க! பரண் மேலே பித்தளைப் பானைக் கிடக்குதாம். குளிக்க வெந்நீர் போடணுமாம். எடுத்து தாங்க!” என்று சத்தமாக என் பின்னால் வந்து குரல் கொடுத்தாள் என் மனைவி.

மருமகள் கூடத்திலிருந்த ஷோபாவில் சாய்ந்து படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள். என் பையன் அப்போது அங்கே வந்து, “கோவில் குருக்களுக்கு போன் செய்து சொல்லணும் என்று சொன்னீங்களே. இந்தாங்க உங்க போன்” என்று சொல்லியபடி தூணுக்கு அருகே போனை வைத்துவிட்டு கொல்லைப்புறம் சென்று நோட்டம் விட்டான்.

நான் அருகேயிருந்த ஒரு பழைய ஸ்டூலை எடுத்து நகர்த்தி அதில் ஏறி பரணை எட்டிப் பார்த்தேன்.

தூசும் தும்புமாக அதில் ஏதேதோ தட்டுமுட்டு சாமான்கள் கிடந்தது. பாம்பு இருந்தாலும் இருக்கும் போலிருக்கு! நல்ல வேளை பித்தளைப் பானை கையிக்கு எட்டும் தூரத்திலேயே தெரிந்தது.

“விழுந்துகிழுந்து தொலைச்சு அப்புறம் என் உயிரை வாங்காதீங்க! ஜாக்கிரதையா எடுங்க!” என்றாள் என் மனைவி. சமையலறையில் என்னுடைய வயசான அம்மா இருகிற சத்தம் கேட்டது!

நான் அந்த பித்தளைப் பாத்திரத்தை நகர்த்தியெடுத்து தூக்கியபோது ஏகப்பட்ட தூசி . ஒட்டடைகளுடன் பொத்தென்று ஒரு படு பழசான புத்தகமும் கீழே விழுந்தது.

அந்த பாத்திரத்தை நான் ஜாக்கிரதையாக கீழே இறக்கி, ‘டங்’கென்று தரையில் வைத்த போது, ” என்ன புத்தகம் இது? ஐம்பது வருஷத்துக்கு முந்தி நீங்க படிச்ச பள்ளிக்கூட தமிழ் புத்தகம் மாதிரியிருக்கு” என்றபடி இரண்டு தும்மல்களுடன் முகத்தை சுளித்தபடி புரட்டினாள் என் மனைவி.

” என்ன இந்த புத்தகத்தின் நடுவே ஒரு காய்ந்து சருகாப் போன பூ ஒண்ணு இருக்கு! சிவப்புஇங்கால் ‘ மல்லிகைப் பூ 15-8-1970’ என்று ஏதோ எழுதி வெச்சிருக்கீங்க?” என்றபடி என்னை ஏறிட்டுப் பார்த்தாள்.

அதற்குள் வீட்டின் உள்ளேயிருந்து எங்கம்மா கூப்பிடும் குரல் கேட்கவே, “ஏதாவது மலரும் நினைவுப் பொருளோ? என்ன கண்றாவியோ….” என்ற படி பித்தளைப் பானையுடன் உள்ளே சென்றாள்.

எனக்கு பளிச்சென்று மின்னலாக நினைவுக்கு வந்தது. நான் 10வது படிக்கும்போது அந்த அமுதாவை நினைத்து அவள் பின்னாலேயே சுற்றிய அந்த வசந்த காலங்கள்!

‘ அட, அவள் தான் என்ன அழகு. செக்கசெவலேன்று ஒரு தங்க நிறம். கொஞ்சம் பூசியது போன்ற உடல்வாகு. அழகான முகப்பொலிவு. குறுகுறுவென்று பேசும் கண்கள். அப்போதெல்லாம் அவள் அழகுக்காகவே உயிரையே விடலாம் போலத் தோணும். அந்த பள்ளிக்கூடம் என் வசந்தகாலமெல்லாம் நினைவில் வீடியோ படம் போல மனதில் ஓடியது.

அது ஒரு சுதந்திர தின நாள். காலையிலேயே பள்ளியில் கொடியேற்றும் விழா. அந்த காலை நேரத்தில் என் அமுதா பள்ளிக்கு செல்லும் போது நானும் ஒரு குறிப்பிட்ட இடைவெளி விட்டு எங்கேயோ பார்ப்பது போல அவளைப் பார்த்தபடி நடந்து சென்றேன்.

என் மனதும் கண்களும் அவள் மேலேயே இருந்தது. அப்போது தான் அது நடந்தது. அவள் தலையில் வைத்திருந்த மல்லிகைப் பூ சரத்திலிருந்து ஒரே ஒரு மல்லிகைப் பூ மட்டும் நழுவி கீழே ரோட்டில் விழுந்தது.

உடனே சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பொக்கிஷப் புதையலாக அந்தப் பூவை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டேன். அதன் பிறகு அந்தப் பூவை எனது தமிழ் புத்தகத்தின் நடுவே வைத்து அந்த பக்கத்தின் மேலே சிவப்பு இங்க் பேனாவால் ‘மல்லிகைப் பூ 15-8-1970′ என்று எழுதி வைத்தேன். அப்போதெல்லாம் அடிக்கடி தமிழ் புத்தகத்தையெடுத்து அந்தப் பூவைப் பார்ப்பேன். அந்த வெள்ளை நிற மல்லிகைப் பூவும் சில நாட்களிலேயே காய்ந்து பிரவுன் கலரில் பாடம் செய்தது போலாகிவிட்டது. ஆனாலும் அந்தப் பூ அவளை எனக்கு ஞாபகப்படுத்திய படியே இருந்தது.

அப்புறம் அடுத்த வருடம் பழைய பாடப் புத்தகங்களை எடைக்குப் போட்ட போது இந்த தமிழ் புத்தகத்தை மட்டும் போடாமல் அந்த காய்ந்த பூவுடன் பரண் மீது பத்திரப்படுத்தியதெல்லாம் இப்போது நினைவுக்கு வந்தது. அதன் பிறகு கால மாற்றத்தில் அவளும் எங்கேயோ போய் விட்டாள். நானும் எங்கேயோ போய் விட்டேன். எல்லாமே மாறிவிட்டது. மறந்து விட்டது!

இப்போது திடீரென்று மனதிற்குள் ஒரு பரபரப்பும் பரவசமும் ஏற்பட்டது. வீட்டிற்குள்ளே போன பிசாசு இங்கே திரும்பி வருவதற்குள் சீக்கிரம் இந்த மல்லிகைப் பூவை மறைச்சு வைக்கணும் என்று தோன்றியது. அப்போது நான் பனியனுடன் இருந்தேன். உடனடியாக பையில் போட்டுக்கொள்வதற்கும் வழியில்லை. அந்தப் பூவை எங்கே மறைச்சு வைப்பது என்று மனசு கொஞ்சம் தவித்தது!

அப்போது அருகேயிருந்த என்னுடைய ஸ்மார்ட் போன் கண்ணில் பட்டது. அந்த ஐம்பது வருடத்திற்கு முந்திய காய்ந்த அந்த மல்லிகைப் பூவை அப்படியே தரையில் வைத்து, அவசரம் அவசரமாக ஸ்மார்ட் போனில் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன்!

அப்போது உள்ளே கூடத்திலிருந்து கையில் விளக்குமாறுடன் என் மனைவி வருவது தெரிந்தது.

“என்ன அப்படியே உட்கார்ந்திருக்கீங்க? அந்த எருமை வேறு அடிச்சுப் போட்டது மாதிரி தூங்குது! குளிச்சுட்டு கோவிலுக்கு கிளம்ப வேண்டாமா? மேலேயிருந்து ஒரு பாத்திரம் எடுப்பதற்குள் ஒரே குப்பை! எழுந்திருங்க…..” என்றபடி விளக்குமாறால் வேகமாக கூட்ட ஆரம்பித்தாள். அந்த என் மல்லிகைப் பூவும் விளக்குமாறு பட்டு குப்பையோடு குப்பையாக சேர்ந்தது!

அந்தப் புத்தகத்தையும் எடுத்து, “எதுக்கு இந்த மக்கிய புத்தகம்?” என்றபடி நாலாக கிழித்து குப்பையுடன் போட்டு, கூட்டி அள்ளி, கொல்லைப்புற குப்பைக் குழியில் கொண்டுப் போய் கொட்டிவிட்டு வந்தாள்!

எனக்கு கொஞ்சம் திகைப்பாகவும் வருத்தமாகவும் இருந்தது.

ஆனாலும் அந்தப் பூ இப்போது போனில் போட்டாவாக இருக்கிறதே என்று கொஞ்சம் ஆறுதல்.

இனி போனில் இருக்கும் இந்த மல்லிகைப் பூவை மனைவிக்கு தெரியாமல் கம்ப்யூட்டரில் மறைச்சு வைக்கணும்’ என்று நினைத்தபடி குளிக்க கிளம்பினேன்.

சமையலறையிலிருந்து சர்க்கரைப் பொங்கல் வாசனை வந்துக் கொண்டிருந்தது!

அதோடு என் மனைவியின் குரலும் வந்தது:

என்னங்க ….. இதென்ன உங்க செல்போனில ஒரு காஞ்சு போன மல்லிகைப் பூவைப் படம் பிடிச்சு வச்சிருக்கீங்க . எவ வச்ச பூ இது…..?

குளித்துக்கொண்டிருந்த எனக்கு பகீர் என்றது… மேலண்ணத்தில் நாக்கு ஒட்டிக்கொண்டது. பேச்சு வரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *