செய்திகள்

இந்த தேர்தலுடன் இனி தி.மு.க. இருக்காது: எடப்பாடி பேச்சு

ஸ்டாலின் வேடம், நடிப்பு கலைந்து விட்டது; உண்மை சொரூபம் தெரிந்து விட்டது

இந்த தேர்தலுடன் இனி தி.மு.க. இருக்காது:

எடப்பாடி பேச்சு

உடனுக்குடன் மக்களின் குறைகளை தீர்க்கும் அரசு அம்மாவின் அரசு

ராணிப்பேட்டை, பிப்.10–

இந்த தேர்தலுடன் இனி தி.மு.க. இருக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (9–ந் தேதி) ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி, பாண்டியநல்லூரில் நடைபெற்ற இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியதாவது:–

தேர்தல் என்கிற போர் நெருங்கி வருகிறது. அந்தப் போரில் இளம் சிப்பாய்களாகிய நீங்கள் எதிரிகளை ஓட, ஓட விரட்டி வெற்றிக்கொடி நாட்ட வேண்டுமென்று கோருகிறேன்.

நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி அரசு 10 நாட்கள் தாங்காது, 1 மாதம், மூன்று மாதம், 6 மாதம் தாங்காதென்று ஸ்டாலின் சொல்லி வந்தார். இப்போது 4 ஆண்டுகள் முடிந்து, ஐந்தாவது ஆண்டும் தொடங்கவிருக்கிறது ஸ்டாலினே. இன்னும் 3 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வருமென்று இப்போது ஸ்டாலின் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

நான்கு வருடங்களாக இதையேதான் பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறாய். இந்தத் தேர்தல் முடிந்த பிறகும் இதே பாட்டைத்தான் நீ பாடப்போகிறாய். ஏனென்றால், மக்கள் ஓட்டு போட்டு உங்களுக்கு வெற்றியைக் கொடுப்பதில்லை என்று தீர்மானம் செய்துவிட்டார்கள். நான் வழிநெடுகிலும் மக்கள் எழுச்சியை பார்த்துக் கொண்டு வருகிறேன். ஆகவே, ஸ்டாலினே, நீங்கள் எத்தனை வேடம் போட்டாலும் ஒன்றும் பாச்சா பலிக்காது. வேடமெல்லாம் கலைந்துவிட்டது, நடிப்பெல்லாம் கலைந்துவிட்டது, உங்களுடைய உண்மையான முகத்தை மக்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தி.மு.க. என்பது ஒரு குடும்ப அரசியல் கட்சி, வாரிசு அரசியல் கட்சி, அதை அவரே ஒத்துக் கொண்டார். குடும்பமென்று பார்த்தால், ஏற்கனவே, கருணாநிதி, அடுத்தது ஸ்டாலின், இப்போது உதயநிதி. அந்த உதயநிதி நம்முடைய அமைச்சர்களையெல்லாம் கிண்டலடித்து பேசுகிறார். நீ என்றைக்கு முளைத்தாய்? உன்னை யாருக்கு தெரியும்? கருணாநிதி பேரன், ஸ்டாலின் மகன் என்பதால் உன்னுடைய பேச்சைக் கேட்கின்றார்கள்.

எங்களைப்போல் சாதாரண கிளைக்கழக செயலாளராகத் தோன்றி, ஒன்றிய, மாவட்ட, மாநிலப் பொறுப்பு, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் அப்புறம் முதலமைச்சர் என்று வந்திருந்தால் அந்தக் கஷ்டம் தெரியும். கஷ்டமே தெரியாமல் வளர்ந்திருக்கிறாய். அதனால்தான், இளங்கன்று பயமறியாது என்பதுபோல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். ஆகவே, அளந்து பேசுங்கள் உதயநிதியே.

தி.மு.க. இருக்காது

இன்னும் மூன்று மாத காலம் தான் உங்களுக்கு வாய்தா. அதற்குப் பிறகு தி.மு.க. என்ற ஒரு கட்சியே தமிழகத்தில் இருக்குமா? இருக்காதா என்று சந்தேகம். ஏனென்றால், அவ்வளவு பொய் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள், உண்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஸ்டாலின் வாயைத் திறந்தால் பொய்தான். பொய்யைத் தவிர்த்து வேறு ஏதும் பேசுவதில்லை என்று முடிவு செய்துவிட்டார். ஆகவே, அவர்கள் உண்மை பேசுவது அரிது, அதனால் மக்கள் வாக்களிப்பது அரிது.

அண்ணா தி.மு.க. செய்த சாதனைகளையெல்லாம் பட்டியலிட்டு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு திட்டத்தையும் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நேற்றையதினம், திமுக கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது, எடப்பாடி பழனிசாமி தினந்தோறும் பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார், அவர் என்னத்தைக் கிழித்தார்? என்று ஸ்டாலின் சொல்கிறார்.

நாங்கள் கிழித்ததனால்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் என்னென்ன செய்தோம் என்பதை சொல்லிக் கொண்டிருக்கிறோம், நீ ஏன் கோபப்படுகிறாய்? நீ செய்திருந்தால் சொல்லு, நீ செய்யவில்லை, சொல்வதற்கு வழியில்லை. ஆனால், நீ எல்லா இடத்திற்கும் சென்று, இந்த ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை என்று அவதூறு பிரச்சாரம் செய்து மக்களிடம் பேசிக் கொண்டிருக்கிறாய்.

2011–-லிருந்து, புரட்சித் தலைவி அம்மா தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபொழுது என்னென்ன திட்டங்கள் செய்தார். அம்மா மறைவிற்குப் பிறகு, அம்மாவின் அரசு இந்த 4 ஆண்டு காலத்தில் என்னென்ன திட்டங்கள் செய்துள்ளோம். அதையெல்லாம் பத்திரிகைகள் வாயிலாக நாங்கள் மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதில் உங்களுக்கு என்ன சங்கடம்? தவறிருந்தால் சொல்லுங்கள், அதற்கு பதில் சொல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோம். தவறு கண்டுபிடிக்க வழியில்லை. அது உண்மைச் செய்தி.

எரிச்சல் ஏன்?

அவ்வாறு உண்மைச் செய்தி வருகின்ற காரணத்தினால் ஸ்டாலின் எரிச்சலடைகிறார். இவ்வளவு செய்திருக்கிறார்களா? என்று எரிச்சலடைகிறார். ஏனென்றால், அவர் சட்டமன்றத்திற்கு வருவதில்லை. நாட்டு மக்களையும் பார்ப்பதில்லை, நாட்டில் என்ன நடக்கிறதென்றும் தெரிந்து கொள்வதில்லை. அதனால்தான் எங்களைப் பார்த்து பயப்படுகிறார். அட, இவ்வளவு செய்திருக்கிறார்களா! என்று அவரே ஆச்சரியப்படுகின்ற அளவிற்கு சாதனை படைத்த அரசு அண்ணா தி.மு.க. அரசு.

அண்ணா தி.மு.க. எதைச் சொல்கிறதோ அதைச் சாதிக்கும். சொல்லாததையும் சாதிக்கக்கூடிய ஒரே அரசாங்கம் அம்மாவின் அரசாங்கம்தான்.

பாலிடெனிக், ஐடிஐ, வேளாண்மை, மருத்துவம், கால்நடை மருத்துவக் கல்லூரி என பல கல்லூரிகளை தமிழகத்தில் திறந்து உயர்கல்வி படிக்கக்கூடியவர்கள் எண்ணிக்கை உயர்ந்து இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது ஸ்டாலினே. உங்கள் ஆட்சியில் ஏழை மக்கள் உயர்கல்வி படிக்கக்கூடிய சூழ்நிலை உருவானதா? இல்லை. இன்றைக்கு இளைஞர் பட்டாளங்கள் எங்கள் பின்னால் அணிவகுத்து நிற்பதற்குக் காரணம் இதுதான். உங்கள் ஆட்சி காலத்தில் ஏழை மக்களுக்கு இப்படிப்பட்ட திட்டங்களை கொண்டு வரவில்லை, அதனால் மக்கள் பயன்பெறவில்லை.

நாம் செய்து வருவதை பார்த்து ஸ்டாலினுக்கு எரிச்சலாக இருக்கிறது. அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? நீ ஏதும் செய்யவில்லை, உங்கள் குடும்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். நாட்டு மக்களை மறந்தீர்கள், நாட்டு மக்கள் உங்களை மறந்துவிட்டார்கள். இதுதான் நடந்துள்ளது. நாட்டு மக்களை எண்ணி திட்டங்களைச் செயல்படுத்தியிருந்தால் நாட்டு மக்கள் உள்ளங்களில் நீங்கள் இருந்திருப்பீர்கள்.

எடப்பாடி பழனிசாமி எதைச் சொன்னாலும் செய்ய மாட்டேங்கிறார் என்று சொல்கிறார் ஸ்டாலின். எதைச் சொன்னாலும் அதை செய்து காட்டி சாதனை படைக்கும் அரசு அண்ணா தி.மு.க. அரசு, அம்மாவின் அரசு. நேற்றையதினமே, 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு 12,110 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுமென்று அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. யாரும் இனிமேல் அதை தடை செய்ய முடியாது.

பொய்யர் ஸ்டாலின்

ஸ்டாலின் அவரால் செய்ய முடியாத திட்டங்களை எல்லாம் செய்வோம் என்று பொய் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லா இடங்களுக்கும் சென்று பொய்யைப் பேசிப் பேசி நிறைவேற்றமுடியாத, கவர்ச்சிகரமான திட்டத்தையெல்லாம் சொல்லி மக்களிடத்தில் தவறான, அவதூறான பிரச்சாரத்தைச் செய்து, மக்களை ஏமாற்றி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். இனி அது செல்லுபடி ஆகாது. வரும் தேர்தலில் அண்ணா தி.மு.க.வைத் தான் வெற்றி பெறச் செய்வோம் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

நீட் தேர்வை கொண்டுவந்ததே திமுகவும் காங்கிரசும் தான். 2010-–ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, திமுக அதில் அங்கம் வகித்தது, திமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்தியில் அமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வைக் கொண்டு வந்தார்கள். இப்போது அதை மறைக்கிறார்கள். சட்டமன்றத்தில் அதைப் பற்றிப் பேசுவதேயில்லை, வெளியில் போய் பச்சைப்பொய் பேசுகிறார்கள். இப்படி பொய்யைப் பேசி, பேசி மக்களை ஏமாற்ற பார்க்கிறீர்கள். இது நடக்காது. பேச, பேச லைவ்-ல் போய்க் கொண்டிருக்கிறது ஸ்டாலினே. 30 ஆண்டுகளுக்கு முன்பு பேசுவது போல் இப்போதும் பேசாதீர்கள். சொன்னவற்றையெல்லாம் நிறைவேற்றித் தந்திருக்கிறோம். ஆனால் தி.மு.க.வைப் பொறுத்தவரை, தலைவரிலிருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் வரை பேசுவது அத்தனையும் பச்சை பொய். உண்மை என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஆகவே, பொய் பேசுவதற்கு ஒரு தலைவருக்கு நோபல் பரிசு கொடுக்கலாமென்றால், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும். அதுமட்டுமல்ல, எல்லா இடங்களுக்கும் சென்று ஒரு பெட்டியை வைக்கிறார், மனு கொண்டுவந்து அந்த பெட்டியில் போடுங்கள், பின்னர் அதற்கு சீல் வைத்து விடுகிறேன். நான் முதலமைச்சரானால் அதை உடைத்து படிக்கிறேன் என்கிறார்.

நீ என்றைக்கு முதலமைச்சராவது? என்றைக்கு பெட்டியை உடைப்பது? என்றைக்கு மக்கள் அளித்த மனுவை பார்த்து படித்து அதற்கு தீர்வு காணுவது? நீ, நேரடியாக கொடுக்கும் மனுவையே சரியாக படிக்கத் தெரியவில்லை. நான் சொல்லக்கூடாது, இருந்தாலும், நான் வரும்போது என்னுடைய கழக நண்பர்களெல்லாம் சொன்னார்கள், இதை ஏன் சொல்லவே மாட்டேங்கிறீர்கள் என்று. ஒரு தலைவரைப் பற்றி தவறாக பேசக்கூடாது. இருந்தாலும், இருக்கின்ற உண்மையைப் பேசித்தான் ஆகவேண்டும்.

முதலமைச்சர் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்க்கும் மேலாண்மைத் திட்டத்தை இன்னும் ஒரு வாரத்தில் நான் துவக்கி வைக்க உள்ளேன். பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க செல்போனில் 1100 என்ற எண் அழுத்தினால், அது பதிவாகி, சம்பந்தப்பட்ட துறைக்கு சென்றுவிடும். அந்த உதவி மையத்தின் எண் 1100, கைபேசி மூலமாக 1100 எண்ணை அழுத்தி உங்கள் குறைகளைக் கூறலாம்.

எனவே இதன் மூலம் கிராமத்திலிருந்தே நம்முடைய பிரச்சனையை கைபேசி மூலமாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம். நீ பெட்டியை உடைக்க வேண்டிய அவசியமே இல்லை. 30 வருடங்களுக்கு முன்பு தான் பெட்டியை உடைத்து, படித்துப் பார்த்தது எல்லாம். இப்போது நவீன உலகம். காலத்திற்கேற்றவாறு திட்டங்களைக் கொண்டுவந்தால்தான் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்வார்கள்.

ஆகவேதான், எங்கள் அரசின் தகவல் தொழில்நுட்ப துறை மூலம் இப்படிப்பட்ட திட்டத்தைக் கொண்டு வர இருக்கிறோம். இனி தமிழகத்திலிருக்கும் எந்தத் துறையில் குறைபாடு ஏற்பட்டாலும், மக்களுக்கு குறைகள் இருந்தால் அதை கைபேசியிலிருந்து 1100 எண்ணை அழுத்தி குறைகளை தெரிவிக்கலாம், உடனுக்குடன் அந்தக் குறைகளை தீர்க்கும் அரசாக அம்மாவின் அரசு திகழும்.

எதிர்கால தமிழகத்தை ஆளக்கூடியவர்கள் இளைஞர்கள்தான். நான் 20 வயதில் கல்லூரியில் படிக்கும்போது, நான் எங்கள் ஊரில் கிளைக் கழகச் செயலாளராக பணியை துவங்கினேன். நான் கொடியை நட்டபோது இரண்டே நாளில் கொடியை எடுத்துப்போட்டு விட்டார்கள். அப்போது எங்கள் ஊர் காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. என் அப்பா சொன்னார், ஊர் பொல்லாப்பு வேண்டாம், எல்லாம் காங்கிரஸ் கட்சியாக இருக்கும்போது நீ கொடி நட்டால் விடுவார்களா என்றார்.

பிறகு கல்லூரி முடித்துவிட்டு அதே ஊரில் கொடி கம்பத்தை நட்டு இன்றைக்கு உங்கள் முன் தமிழகத்தினுடைய முதலமைச்சராக காட்சியளித்துக் கொண்டிருக்கிறேன். அதேபோல, இங்கு வருகை தந்திருக்கும் இளைஞர் பட்டாளம், தகவல் தொழில்நுட்பப் பிரிவு, இளைஞர் பாசறையைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் அனைவரும் கடுமையாக உழையுங்கள், அரசு போடுகின்ற திட்டங்களை நாட்டு மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.

கட்சிக்கும், தலைமைக்கும் விசுவாசமாக இருங்கள், நாட்டு மக்களுக்கு நல்லதை செய்யுங்கள். இதையெல்லாம் செய்தால் நிச்சயமாக நீங்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும், ஏன், தமிழகத்தின் முதலமைச்சராகக் கூட இந்த அண்ணா திமுக-வில் வரலாம், வேறு எந்தக் கட்சியிலும் வர முடியாது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *