ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை என மோடி பெருமிதம்
பாலி, நவ.17-
இந்தோனேசிய மாநாட்டில் ‘ஜி20’ அமைப்பின் தலைமை பொறுப்பு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய விஷயம் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
சுதந்திரத்திருநாள் அமுதப்பெருவிழாவை வெற்றிகரமாக கொண்டாடி முடித்துள்ள இந்த தருணத்தில் நாட்டுக்கு பெருமிதம் சேர்க்கும் வகையில் ‘ஜி20’ அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா அடுத்த மாதம் 1–ந் தேதி ஏற்கிறது.
முன்னதாக இந்த அமைப்புக்கு பொறுப்பு ஏற்றிருந்த இந்தோனேசியாவில் பாலித்தீவில் ‘ஜி–20’ அமைப்பின் உச்சி மாநாடு கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட உலக தலைவர்கள் கலந்து கொண்ட இந்த மாநாடு நேற்று முடிவுக்கு வந்தது.
அப்போது மாநாட்டு பிரகடனத்தை உறுப்பு நாடுகள் இறுதி செய்தன.
இந்த பிரகடனத்தில், “மோதல்களில் அமைதித் தீர்வு, நெருக்கடிகளைத் தீர்க்க முயற்சிகள், தூதரக ரீதியில் முயற்சிகள் மற்றும் பேச்சு வார்த்தைகள் முக்கியம். இன்றைய சூழல், போருக்கானது அல்ல” என கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ‘ஜி–20’ அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ, பிரதமர் மோடியிடம் முறைப்படி ஒப்படைத்தார்.
அப்போது பிரதமர் மோடி கூறும்போது, “ஜி–20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்பது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய விஷயம் ஆகும்” என குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், “அனைத்து உறுப்பு நாடுகளின் முயற்சிகளுடனும் இணைந்து, ‘ஜி–20’ உச்சிமாநாட்டை உலக நலனுக்கான அம்சமாக மாற்ற முடியும்” என தெரிவித்தார்.
‘ஜி–20’ அமைப்பில் இந்தியாவுடன் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பும் அங்கம் வகிக்கின்றன.
‘ஜி–20’ அமைப்புக்கு இந்தியா தலைமை பொறுப்பு ஏற்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த அமைப்பின் நாடுகள், ஒட்டுமொத்த உலகளாவிய உற்பத்தியில் 80 சதவீதத்தையும், உலக பொருளாதாரத்தில் 85 சதவீத பங்கையும், உலக வர்த்தகத்தில் 75 சதவீத பங்களிப்பையும், மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கையும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஜி20’ அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்பதையொட்டி, அதன் சின்னம், கருப்பொருள், இணையதளம் ஆகியவற்றை பிரதமர் மோடி டெல்லியில் சமீபத்தில் காணொலி காட்சி வழியாக தொடங்கி வைத்தது நினைவுகூரத்தக்கது.
அடுத்த ஆண்டு ‘ஜி20’ உச்சி மாநாடு, இந்தியாவில் நடக்க உள்ளது.