செய்திகள்

இந்தூரில் குழந்தையுடன் பிச்சை எடுத்து மாதம் ரூ.1 1/2 லட்சம் சம்பாதிக்கும் பெண்

Makkal Kural Official

இந்தூர், பிப். 14–

குழந்தையுடன் பிச்சை எடுத்து மாதம் ரூ.1 1/2 லட்சம் சம்பாதிக்கும் பெண், 2 மாடியில் வீடு, நிலத்துடன் வசித்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் நகரம் அந்த மாநிலத்தின் பாரம்பரிய நகரங்களில் முக்கியமானது. இங்கு ஏராளமான பிச்சைக்கார்கள் பிச்சை எடுப்பதையே முழு நேர தொழிலாக செய்து வருகிறார்கள். இங்கு சுமார் 7 ஆயிரம் பிச்சைக்காரர்கள் இருப்பதாக கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது. இதில் மனதை கடினமாக்கும் விஷயம் என்னவென்றால், அவர்களில் 50 சதவீதம் குழந்தைகள் ஆவர்.

இந்தூர் நகரில் முக்கியமான 37 சந்திப்புகளில் (முக்கிய இடங்கள்) அவர்கள் கையேந்தி பிச்சை எடுத்து வருகிறார்கள். ஆண்டுக்கு அவர்கள் ரூ.20 கோடி வரை பிச்சை எடுத்து சம்பாதிப்பதாக அந்த கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்திருக்கிறது.

பிச்சைக்கார்கள் இல்லாத நிலையை உருவாக்க விரும்பிய இந்தூர் மாநகராட்சி, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சியில் ஒரு சமூக அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக சமூக அமைப்பை சேர்ந்தவர்கள் ஒருநாள் சாலையில் பயணிக்கையில், 7 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையுடன் பெண் ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அந்த சமூக அமைப்பைச் சேர்ந்த ஊழியர், குழந்தையை வைத்து ஏன் பிச்சை எடுக்கிறாய்? என்று கேட்டு சத்தம் போட்டுள்ளார்கள்.

திருடுவதைவிட மேல்…

அதற்கு அந்தப் பெண், ”பட்டினி கிடப்பதற்கு பதிலாக பிச்சை எடுக்கிறோம். திருடுவதைவிட பிச்சை எடுப்பது மேல்தான்” என்று பேசியிருக்கிறார். அந்த பெண் இந்திராபாய் என்பதும் அவருடைய மகளுக்கு 7 வயது என்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசுக்கு தகவல் கொடுத்து அந்தப் பெண்ணை சமூக அமைப்பினர் கைது செய்ய வைத்தனர். அவரிடம் இருந்து ரூ.19,600-ம், குழந்தையிடம் இருந்து ரூ.600-ம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், போலீசாரையே திகைக்க வைக்கும் அளவுக்கு தகவல்களை அந்த பெண் கூறியுள்ளார். இந்திராபாய்க்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். 2 முதல் 10 வயதுக்கு உள்பட்டவர்கள். அவர்களையும் பிச்சை எடுக்கவைத்து சம்பாதித்து வந்திருக்கிறார். மக்கள் நெரிசல் அதிகம் இருக்கும் சந்திப்பில் மூத்த மகளை பிச்சை எடுக்கவிடுவாராம். அங்கு ஒரு பிரசித்திபெற்ற கோவில் அண்மையில் பிரம்மாண்டமாக கட்டி திறக்கப்பட்டது.

அங்கு பிச்சை எடுத்ததில், வெறும் 45 நாட்களில் ரூ.2½ லட்சம் வசூல் ஆகி உள்ளதாம். அதாவது ஒரு மாதத்துக்கு சுமார் ரூ.1½ லட்சத்துக்கு மேல் கிடைத்துள்ளாம். இந்திராபாய்க்கு ராஜஸ்தானில் 2 மாடி வீடும், விவசாய நிலமும் இருக்கிறதாம். அவர் கையில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போன் வைத்திருக்கிறார். அவருடைய கணவர், மோட்டார் சைக்கிள் வைத்து இருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *