செய்திகள்

இந்தி மொழி சர்ச்சை: ஏ.ஆர்.ரகுமான் கருத்து

சென்னை, ஏப். 9–

இந்தி திணிப்பை வலியுறுத்தி அமித்ஷா பேசிய பிறகு, நாட்டில் இந்தி மொழி விவகாரம் மீண்டும் சர்ச்சையாகி உள்ள நிலையில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கருத்து தெரிவித்துள்ளார்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்ற கவிதையில், ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வரிகள் உள்ளது. அதனை ஏ.ஆர்.ரகுமான் சுட்டிக்காட்டி, தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், ‘ழ’கரம் ஏந்திய தமிழணங்கு என்ற வார்த்தைகளை தாங்கிய போட்டோ ஒன்றையும் ரகுமான் பதிவிட்டிருக்கிறார். அதில், புரட்சிக்கவிஞரின் வரிகள் இடம்பெற்றுள்ளன.

ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக மாநிலங்கள் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்தால், நாடு முழுவதும் மாநில மொழிகள் பற்றிய உரிமை, கோடை வெயிலுக்கு இணையாக அனல்பறக்க பேசப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் சரியான கருத்தை தெரிவித்திருப்பதாக டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.