தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப் பெருந்தகை ஆவேசம்
சென்னை, மார்ச் 12-
அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக மோடி அரசு கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தையும் இந்தியா கூட்டணி ஆட்சியில் அகற்றுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இன்று சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய மக்களை மதத்தின் அடிப்படையில், மொழியின் அடிப்படையில் பிளவுபடுத்தும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை, பாஜக அரசு நேற்று அமல்படுத்தியுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-ல் கொண்டுவரப்பட்ட போது, அதனை எதிர்த்து இந்தியா முழுக்க மக்கள் போராடி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மோடி அரசு மீண்டும் அந்த சட்டத்தை அமல்படுத்தியது ஏன்? என்பதற்கு பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கும் போது, தமிழ் பேசும் இந்துக்களான, இலங்கை மக்கள் இந்தியாவுக்கு வரும்போது குடியுரிமையை மறுப்பது ஏன்? இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அண்ணாமலை பதிலளிக்க வேண்டும். இந்த சட்டத்தை அண்ணாமலை கண்டிக்காதது ஏன்? தமிழர்களுக்கு உரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்காதது ஏன்? இந்துக்களுக்கு எதிரான அவருடைய நடவடிக்கை இதிலிருந்து அம்பலமாகியுள்ளது.
அரசியலமைப்புக்கு அச்சுறுத்தல்
இந்தியாவின் பன்மை தன்மை தான் சிறப்பு வாய்ந்த ஒன்று. அதை பாஜக அரசு சிதைத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் சிஏஏ, என்ஆர்சி சட்டங்களை கடுமையாக எதிர்த்தது. இதில் விதிவிலக்காக அதிமுக மட்டுமே ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றத்தில் ஓட்டு அளித்தது. தமிழ்நாட்டில் பாஜகவும் அதிமுகவும் மட்டுமே இதனை ஆதரிக்கிறது. இதற்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனை இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் இஸ்லாமிய சிறுபான்மையினர் புரிந்து கொண்டுள்ளனர்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 14 வது பிரிவு பாஜக அரசால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. அதை புறக்கணித்துள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் மோடி பதில் சொல்ல வேண்டும். ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கும்போது, தமிழ் பேசும் இந்துக்கள் இந்தியாவிற்கு வந்தால் அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது. இந்தி பேசும் இந்துக்களுக்கு சலுகையும் தமிழ் பேசும் தமிழர்களுக்கு அநீதியும் பாஜக ஆட்சியில் நடைபெறுகிறது. தமிழர்களின் மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவற்றை பாஜக எப்போதும் ஏற்பது இல்லை. அதனால்தான் தமிழர்களின் உரிமைகள் மட்டும் மறுக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. உடனே இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
சர்வதேச சட்டத்தின்படி இந்திய வான் எல்லையில் விமானத்தில் பறக்கும் போது ஒரு குழந்தை பிறந்தால், அந்த நாட்டில் அந்த குழந்தைக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பது சர்வதேச சட்டமாக உள்ளது . இது உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவானது. ஆனால் அதனை மோடி அரசு ஏற்க மறுக்கிறது; சர்வதேச சட்டத்தை கூட ஏற்பதில்லை.
நாடகம் நடத்தும் பாஜக
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியின் போது லட்சக்கணக்கான வீடுகள் கட்டித் தரப்பட்டது. ஆனால் பாஜக அரசு, வெறுமனே நீலி கண்ணீர் மட்டுமே வடிக்கிறது. தேர்தல் பத்திர வழக்கில் பாஜக உச்சநீதிமன்றத்தால் அடி வாங்கி இருக்கிறது. இதனை மாற்றவே திடீரென சிஏஏ, என்ஆர்சி சட்டங்களை நேற்று திடீரென அமல்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுகவும் பதில் அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்புக்கு 37 ஆயிரம் கோடி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த போதும், ஒரு பைசா கூட தராமல் தமிழர்களை ஏமாற்ற பாஜகவினர் நாடகம் மட்டுமே நடத்திக் கொண்டுள்ளனர். தேர்தல் பத்திர விவரங்களை மூடி மறைக்கவே இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோத சட்டங்களையும் இந்தியா கூட்டணி ஆட்சியில் அகற்றுவோம்.
அதிமுகவின் போலி நாடகம்
போதைப் பொருளுக்கு எதிராக அதிமுகவும் பாஜகவும் போராடுகிறோம் என்கிறார்கள். ஆனால் இந்தியாவில் புலங்கும் போதை பொருள்கள் அனைத்தும், குஜராத் மாநிலத்தில் உள்ள அதானிக்குச் சொந்தமான முந்த்ரா துறைமுகத்திலிருந்துதான் உள்ளே வருகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் தானே உளவுத்துறை செயல்படுகிறது. அவர்கள் நினைத்தால் இந்தியாவுக்குள் நடக்கும் போதைப்பொருள் விநியோகத்தை தடுத்து நிறுத்த முடியும் தானே. ஏன் அவர்கள் செய்ய மறுக்கிறார்கள்.
இந்தியாவில் போதை பொருள் நடமாட்டத்திற்கு பாஜக அரசு தான் காரணம் எனக் குற்றம் சாட்டுகிறேன். பாஜக முற்றிலும் தோல்வி அடைந்து விட்ட அரசாக இருக்கிறது . மக்கள் இந்த தேர்தலில் அவர்களை துடைத்தெறிவார்கள் .தமிழ்நாட்டில் ஆர்சி, சிஏஏ சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் இந்த சட்டங்கள் ஒருபோதும் நடைமுறைக்கு வராது. தேர்தல் ஆணையர் பதவி விலகியதற்கு உள்நோக்கம் உள்ளதா என கேட்கிறீர்கள்? பாஜக ஆட்சியில் நடைபெறும் அனைத்துமே உள்நோக்கத்தோடு தான் நடைபெறுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ஆனந்த் சீனிவாசன், இதயத்துல்லா உள்ளிட்ட பலர் இருந்தனர்.