செய்திகள் போஸ்டர் செய்தி

இந்தி சினிமா பிரபல டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார்

* ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித் படங்களுக்கு ஆஸ்தான நடன இயக்குனர்

* ‘ஏக் தோ தீன்’…’ உள்ளிட்ட பல பாடல்களின் டான்ஸ் மூலம் பட்டிதொட்டிகளில் பேச வைத்தவர்

இந்தி சினிமா பிரபல டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார்

அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்

 

மும்பை, ஜூலை 3–

இந்தி சினிமா பிரபல பெண் நடன இயக்குநர் சரோஜ்கான் திடீர் மாரடைப்பு காரணமாக நள்ளிரவு 2.30 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 71.

இந்தி சினிமாவில் இன்னும் மறக்கவே முடியாத பாடல்களாக இருக்கும் ‘ஏக் தோ தீன்’, ‘தாக் தாக்’, ‘ஹவா ஹவா’, ‘தம்மா தம்மா’ போன்ற பிரபல பாடல்களுக்கு நடன இயக்குநராக இருந்தவர் சரோஜ்கான். பிரபல நடிகைகள் மாதுரி தீட்சித், மறைந்த ஸ்ரீதேவியின் பெரும்பாலான படங்களுக்கு ஆஸ்தான நடன இயக்குநராக சரோஜ் கான் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று முறை தேசிய விருதுகளை வென்ற சரோஜ் கான், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். மும்பையில் பாந்த்ராவில் உள்ள குருநானக் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த மாதம் இறுதி வாரம் சரோஜ் கான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையிலும் கொரோனா இல்லை எனத் தெரியவந்தது.

இதனால் சுவாசக் கோளாறுக்கான சிகிச்சை மட்டும் சரோஜ் கானுக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நள்ளிரவு 2.30 மணி அளவில் ஏற்பட்ட திடீர் மரடைப்பால் சரோஜ் கான் உயிரிழந்தார்.

3 நாட்கள் கழித்து நினைவஞ்சலி

சரோஜ் கானுக்கு ராஜு கான் என்ற மகனும், சுகையான கான் என்ற மகளும் உள்ளனர். சரோஜ் கானின் இறுதிச்சடங்கு மும்பை புறநகர் மாலட் பகுதியில் இன்று காலை நடைபெற்றது. இவரின் நினைவஞ்சலிக் கூட்டம் 3 நாட்களுக்குப் பின் நடைபெறும் என்று சரோஜ் கானின் மகள் சுகைனா கான் தெரிவித்தார்.

சரோஜ் கான் தனது 13-வயதில், நடன இயக்குநர் சோஹன்லாலைத் திருமணம் செய்துகொண்டார். அப்போது சோஹன் லாலுக்கு 41 வயதாகி இருந்தது. அவரிடம் இருந்து நடனத்தைக் கற்றுக்கொண்ட சரோஜ் கான் திரைப்படங்களில் நடன உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

சரோஜ் கானின் இயற்பெயர் நிர்மலா. இந்துவாகப் பிறந்து பின்னர் முஸ்லிம் மதத்துக்கு மாறினார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவுக்கு சரோஜ் கானின் பெற்றோர் குடிவந்தனர். தனது சிறுவயதில் திரைப்படங்களில் நடித்த சரோஜ் கான் பின்னர் நடனக்குழுவில் பணியாற்றினார்.

1980–90–ம் ஆண்டுகளில் மிக பிரபலம்

கடந்த 1980களிலும், 1990களிலும் பாலிவுட்டில் புகழ்பெற்ற நடன இயக்குநராக சரோஜ்கான் விளங்கினார். இதுவரை 2 ஆயிரம் பாடல்களுக்கும் அதிகமாக நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பாலிவுட் நடிகர்கள் மத்தியில் “மாஸ்டர்ஜி” என்ற அடைமொழியுடன் சரோஜ் கான் அழைக்கப்பட்டார்.

கடந்த 1974-ம் ஆண்டு ‘கீதா மேரா நாம்’ எனும் திரைப்படத்துக்கு நடன இயக்குநராக சரோஜ் கான் அறிமுகமானார். ஆனால், அந்தத் திரைப்படமும், அதன்பின் அவர் பணியாற்றிய திரைப்படங்களும் பெயரைப் பெற்றுத் தரவில்லை.

கடந்த 1987-ம் ஆண்டு வெளியாகிய ‘மிஸ்டர் இந்தியா’ திரைப்படத்தில் வரும் ‘ஹவா ஹவாய்’ பாடலின் நடனம் இவரை நாடு முழுவதும் புகழ்பெறச் செய்தது. அதன்பின் வெற்றிகரமான நடன இயக்குநராகப் பல படங்களில் சரோஜ் கான் பணியாற்றினார்.

குறிப்பாக ஸ்ரீதேவி நடித்து பாலிவுட்டில் சக்கைபோடு போட்ட ‘நாகினா’, ‘சாந்தினி’ திரைப்படங்களுக்கு சரோஜ் கான் நடன இயக்குநராக இருந்தார். ‘தேஜாப்’ திரைப்படத்தில் வரும் ‘ஏக் தோ தீன்’ பாடல், மாதுரி தீட்சித்தின் ‘தானேதார்’ திரைப்படத்தில் வரும் ‘தம்மா தம்மா’ பாடல், ‘பேட்டா’ திரைப்படத்தில் வரும் ‘தாக் தாக் கர்னே’ ஆகியவை சரோஜ் கானுக்குப் பெரும் புகழை தேடித்தந்தது.

சமீபத்தில் சஞ்சீய் லீலா பன்சாலியின் ‘தேவதாஸ்’ திரைப்படத்தில் ‘தோலா ரே தோலா’ பாடலுக்கும் சரோஜ் கான் நடன இயக்குநராக இருந்தார். கரீனா கபூர் நடித்த ‘ஏ இஸ்க் ஹயே’ பாடலிலும் சரோஜ் கான் பணியாற்றினார்.

கடைசியாக கடந்த 2019–-ம் ஆண்டில் கரண் ஜோகர் தயாரிப்பில் கலங்க் திரைப்படத்தில், ‘தபா ஹோயேகே’ பாடலுக்கு நடன இயக்குநராக சரோஜ் கான் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள், நடிகர்கள் இரங்கல்

சரோஜ் கான் மறைவுக்கு மத்திய அமைச்சர் ஜீதேந்திர சிங், மகாராஷ்ட்ர அமைச்சர்கள் அனில்தேஷ்முக், பிரகாஷ் ஜாவேத்கர், நடிகைகள் மாதுரி தீட்சித், நடிகர் அஷ்யகுமார், டைரக்டர் ரெமோ டிசவுசா, ரித்தீஷ் தேஷ்முக் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தி நடிகர் –நடிகைகள் பலர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *