சென்னை, ஜன 9–
மக்களுக்கு வானிலை தொடர்பானத் தகவலை அளித்து லட்சக் கணக்கான உயிர்களையும், அவர்களது உடைமைகளையும் தொடர்ந்து பாதுகாத்து வரும் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150ஆம் ஆண்டு விழா சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளி வளாகத்தில் விமர்சையாக நடைபெற்றது என்று நிறுவனரும் மூத்த முதல்வருமான புருஷோத்தமன் தெரிவித்தார்.
80ஆம் ஆண்டு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் சென்னை வானிலை மையம் இதற்கான ஏற்பாடுகளை எவர்வின் பள்ளிக் குழுமத்துடன் இணைந்து செய்தது. விழாவை ஒட்டி மாணவர்களின் ஊர்வலம் IMD 150 என்திற வடிவமைப்பு, கண்காட்சி என ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நிகழ்ச்சித் தொடக்கத்தின்போது இந்திய வானிலை ஆய்வுத் துறை பிரத்யேகமாக உருவாக்கிய பாடலுக்கு ஏற்றபடி மாணவிகள் நடனம் ஆடினர். மேலும் 2 ஆயிரம் மாணவர்கள் இணைந்து IMD 150 என்ற வடிவமைப்பை பிரமாண்டமாக உருவாக்கினர்.
இதில் அழகிய வானவில், மழைத்துளிகள் என கூடுதல் வடிவமைப்பும் இருந்தது. இது தவிர 25 உயர் வகுப்பு மாணவிகள் தங்கள் முகம் மற்றும் கைகளில் IMD 150, RMC 80 போன்றவற்றை வரைந்து அசத்தினர்.
இவ்விழா தொடர்பாக “இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150 காலப் பயணம்” என்ற தலைப்பில் 25 அரிய தகவல்கள் அடங்கிய கண்காட்சியும் இடம்பெற்றது. இதை ஆயிரக்கணக்கான மாணவர்கள் பார்த்தனர். மேலும் சென்னை வானிலை மையம் பிரத்யேகமாக கொண்டு வந்திருந்த “வெதர் ஸ்டேஷன்” என்ற கண்காட்சியும், வானிலையைக் கண்டறியும் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இறுதியாக 400 மாணவ, மாணவிகள் IMD 150 டி-–ஷர்ட் மற்றும் IMD 150 தொப்பி அணிந்து பிரதான சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வானிலை விவரங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நடைப்பயணம் மேற்கொண்டனர்.
விழாவில் சென்னை வானிலை மையத் தலைவர் எஸ். பாலச்சந்திரன், உயர் அதிகாரிகள், எவர்வின் பள்ளிக்குழும சிஇஓ மகேஸ்வரி, மூத்த முதல்வர் புருஷோத்தமன், இயக்குனர்கள் வித்யா மற்றும் முரளி கிருஷ்ணா ஆகியோர் பங்கேற்றனர்.