செய்திகள்

இந்திய வரலாற்றிலேயே அரசியல் கட்சியான ஆம் ஆத்மியை குற்றாவாளியாக்கும் அமலாக்கத்துறை

டெல்லி, மே 17–

டெல்லி யூனியன் பிரதேச அரசின் மதுபான கொள்கை முறைகேடு மூலம் ஆம் ஆத்மி கட்சி ஆதாயம் அடைந்ததாக, அமலாக்கத்துறை இன்று தாக்கல் செய்யும் குற்றப் பத்திரிகையில், இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, அரசியல் கட்சி குற்றம்சாட்டப்பட உள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு டெல்லி யூனியன் பிரதேச துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் இணைந்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனை குறித்து விசாரித்து வருகிறது. இதே வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்கிறது.

ஆதாயம் அடைந்த கட்சி

இதனிடையே மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது, டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டின் சட்டவிரோதப் பணம் மூலமாக ஆம் ஆத்மி கட்சியும் ஆதாயம் அடைந்துள்ளது. ஆகையால் ஆம் ஆத்மி கட்சியின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெறும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் அரசியல் கட்சி ஒன்று குற்றப்பத்திரிகையில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் 9-வது கூடுதல் குற்றப்பத்திரிகையில் இன்று ஆம் ஆத்மி கட்சியை சேர்க்க இருக்கிறது அமலாக்கத்துறை. அப்படி ஆம் ஆத்மி கட்சியின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டால் அக்கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்படும்; மேலும் தேர்தல் ஆணையத்துக்கும் இதுபற்றி அமலாக்கத்துறை தகவல் தெரிவிக்கும்.

தற்போது பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சியின் பெயர் சேர்க்கப்பட்டால் தேர்தல் ஆணையமானது அக்கட்சியை தடை செய்ய வாய்ப்பிருக்கிறது. அப்படி தடை செய்தால் பஞ்சாப், டெல்லி மாநிலங்களில் அரசியல் குழப்பம் ஏற்படும் என்கிற அச்சம் நிலவுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *