செய்திகள்

இந்திய மாணவர்களை பிணைக் கைதிகளாக பயன்படுத்தும் உக்ரைன்: ரஷ்யா குற்றச்சாட்டு

மாஸ்கோ, பிப். 3–

இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் மனித கேடயமாகப் பயன்படுத்தி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கார்கிவ், கீவ், சுமி என அந்நாட்டின் முக்கிய நகரங்களில் இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். ரஷ்யாவின் தாக்குதலால் ஏற்கனவே ஒரு இந்திய மாணவர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், ருமேனியா, போலந்து ஆகிய எல்லைகள் வழியாக வெளியேறுவதில் சிக்கல் நீடித்து வருவதாக மாணவர்கள் கூறுகின்றனர். இதுவரை, உக்ரைனிலிருந்து 6,000 இந்தியர்கள் இந்தியா வந்துள்ளதாக இந்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச்சூழலில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கப் பிரதமர் மோடி நேற்று ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி மூலம் பேசினார். உக்ரைன் விவகாரம் குறித்தும், தாக்குதல் நடைபெறும் பகுதிகள் குறிப்பாக கார்கிவ் நகரிலிருந்து இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தும் இருவரும் பேசினர்.

கேடயமாக பயன்படுத்தும் உக்ரைன்

இதுதொடர்பாக ரஷ்யா வெளியிட்ட அறிவிப்பில், “உக்ரைன் போர் மண்டலத்திலிருந்து இந்தியக் குடிமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றி அவர்கள் தாயகம் திரும்புவதை உறுதி செய்யத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் ராணுவத்துக்கு புதின் வழங்கியுள்ளார்.

குறிப்பாக கார்கிவ் பகுதியில் இருக்கும் இந்திய மாணவர்களைக் குறுகிய பாதை வழியாக ரஷ்ய எல்லைக்கு அழைத்து செல்லும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில், அண்மை தகவல்களின்படி, இந்த மாணவர்களை உக்ரைன் பாதுகாப்புப் படையினர் பணயக் கைதிகளாகக் கைப்பற்றியுள்ளனர். மாணவர்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள். அதோடு, எல்லா வழிகளிலும் ரஷ்யாவுக்குச் செல்வதைத் தடுக்கிறார்கள்.

எங்களுக்குக் கிடைத்த தகவல்படி, உக்ரைனை விட்டு வெளியேறி பெல்கோரோட் செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் குழுவை கார்கிவில் வலுக்கட்டாயமாக வைத்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.