செய்திகள்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அபாரம்

Makkal Kural Official

ராஜ்கோட், ஜன. 16–

அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 435 ரன்கள் அடித்து அபார சாதனை படைத்தது.

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 116 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இந்தியா-அயர்லாந்து மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்ற நடந்தது.

டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி களம் இறங்கிய இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனைகள் பிரதிகா ராவல் மற்றும் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் அயர்லாந்து வீராங்கனைகள் தடுமாறினர். ஸ்மிருதி மந்தானா 70 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார். இதன் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தானா படைத்தார். ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனாவுக்கு இது 10வது சதம் என்பதால் ஆசியாவில் அதிக சதங்கள் அடித்த இங்கிலாந்து அணியின் டாமி பேமோட்டின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். 80 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து மந்தனா ஆட்டமிழந்தார். இதன் மூலம் முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 233 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தது.

மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த பிரதிகா ராவல் 129 பந்துகளில் 154 ரன்கள் எடுத்தார். இறுதியில் ரிச்சா கோஸ் 59 ரன்களும், தேஜால் 28 ரன்களும், ஹர்லின் டியோல் 15 ரன்கள் எடுக்க இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 435 ரன்கள் எடுத்து சாதனை படைத்தது. இதன் மூலம் மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி தங்களுடைய அதிகபட்ச அணி ஸ்கோரை நிர்ணயித்திருந்தது.

இதனையடுத்து 436 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை எதிர்கொண்ட அயர்லாந்து மகளிர் அணியினர் ஆரம்பம் முதலே ரன்களை சேர்க்க தடுமாறினர். கேப்டன் கேபி லீவிஸ் 1 ரன்னிலும், கிறிஸ்டினப டக் அவுட்டாகியும், ஒர்லா 36 ரன்களிலும் ஆட்டமிழக்க, அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை சாரா போப்ஸ் 41 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அயர்லாந்து மகளிர் அணி 31.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய மகளிர் அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரையும் 3-–0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ஆண்கள் அணியின் சாதனையை முறியடித்த இந்திய மகளிர் அணி இந்திய ஆடவர் அணி 418 ரன்கள் குவித்ததே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராக இருந்த நிலையில், அந்த சாதனையை முறியடித்த இந்திய மகளிர் அணி, அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 435 ரன்கள் குவித்து அசத்தி உள்ளது. மேலும் மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு இது அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *