செய்திகள்

இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

பிரெஞ்ச், ஜூன் 11–

இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுகிறார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் நிறைவடைந்த நிலையில் டென்னிஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் பிரெஞ்சு ஓபனை 4 வது முறையாக வென்ற போலந்தின் இகா ஸ்வியாடெக் ‘நம்பர் ஒன்’ இடத்தில் கம்பீரமாக தொடருகிறார். அமெரிக்காவின் கோகோ காப் ஒரு இடம் உயர்ந்து 2 வது இடத்தை பிடித்துள்ளார். 2 வது இடத்தில் இருந்த பெலாரசின் சபலென்கா 3 வது இடத்துக்கு சரிந்தார்.பிரெஞ்சு ஓபனில் இறுதிசுற்று வரை முன்னேறி ஆச்சரியப்படுத்திய இத்தாலி வீராங்கனை பாவ்லினி 15 ல் இருந்து 7 வது இடத்துக்கு வந்துள்ளார். அவர் டாப் 10 இடத்திற்குள் நுழைவது இதுவே முதல் முறையாகும்.

ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இத்தாலி இளம் வீரர் ஜானிக் சினெர் ஒரு இடம் அதிகரித்து முதல்முறையாக நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ‘நம்பர் ஒன்’ இடத்தை அலங்கரிக்கும் முதல் இத்தாலி நாட்டவர் என்ற பெருமையையும் பெற்றார். இதுவரை முதலிடத்தில் இருந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பிரெஞ்சு ஓபனில் காயத்தால் 4 வது சுற்றுடன் வெளியேறியதால் நம்பர் ஒன் இடத்தை பறிகொடுத்ததுடன் 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஜோகோவிச் தனது டென்னிஸ் வாழ்க்கையில் மொத்தம் 428 வாரங்கள் முதலிடத்தில் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை முதல்முறையாக சொந்தமாக்கிய ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் ஒரு இடம் உயர்ந்து 2 வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர் சுமித் நாகல் கிடுகிடுவென 18 இடங்கள் முன்னேறி 713 புள்ளிகளுடன் 77 வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் நாகல் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு செல்வதை ஏறக்குறைய உறுதி செய்துள்ளார்.

ஒற்றையர் தரவரிசையில் முதல் 56 இடங்களை வகிக்கும் வீரர், வீராங்கனைகள் நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும். ஆனால் தரவரிசையில் முன்னணியில் இருந்தாலும் ஒரு நாட்டில் இருந்து அதிகபட்சமாக 4 பேருக்கு மேல் ஒலிம்பிக்குக்கு செல்ல அனுமதி கிடையாது. உதாரணமாக ஆண்கள் பிரிவில் முதல் 56 இடத்திற்குள் 7 அமெரிக்க வீரர்கள் உள்ளனர். இவர்களில் 4 பேர் மட்டுமே ஒலிம்பிக்குக்கு தகுதி பெற முடியும். அடுத்த இடங்கள் தரவரிசையில் பின்தங்கி உள்ள வேறு நாட்டு வீரர்களுக்கும் செல்லும். அந்த வகையில் நாகல் ஒலிம்பிக்குக்கு தகுதி பெறும் நிலையில் இருக்கிறார். 2012 ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்குக்கு பிறகு டென்னிசில் ஒற்றையர் பிரிவில் களம் காணும் முதல் இந்தியர் என்ற சிறப்பை பெறுகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *