செய்திகள்

இந்திய குடும்பங்களிடம் 25,000 டன் தங்கம்: உலக தங்க கவுன்சில் தகவல்

புதுடெல்லி,மே.21–

இந்திய குடும்பங்களில் தங்கம் கையிருப்பு 25 ஆயிரம் டன்னாக உயர்ந்திருக்கும் என உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது.

இது குறித்து கவுன்சிலின் இந்திய பிரிவின் நிர்வாக இயக்குனர் சோமசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்திய குடும்பங்கள் வைத்துள்ள தங்க ஆபரணங்கள் குறித்து உலக தங்க கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, இந்திய குடும்பங்களில் 23 ஆயிரம் முதல்- 24 ஆயிரம் டன் தங்கம் உள்ளதாக மதிப்பிடப்பட்டது. இது தற்போதைய ஆய்வில் 24 ஆயிரம் -முதல் 25 ஆயிரம் டன்னாக உயர்ந்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் தங்கத்திற்கான தேவை 760 டன்னாக இருந்தது. இது இந்தாண்டு 750 –- 850 டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்னியச் செலாவணிக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது. அத்துடன், தங்கம் விலையும் குறைந்துள்ளது. இதனால் இந்தாண்டு ஜனவரி- மார்ச் வரையிலான காலாண்டில் தங்கத்திற்கான தேவை 5 சதவீதம் அதிகரித்து 159 டன்னாக உயர்ந்துள்ளது.

அக்ஷய திருதியை மற்றும் திருமண சீசன் காரணமாக நடப்பு ஏப்ரல் –- ஜூன் காலாண்டிலும், தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு, பருவ மழை நன்கு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கிராமப்புற பொருளாதாரம் நன்கு இருக்கும் என்பதால் தங்கம் விற்பனை உயர வாய்ப்புள்ளது.

இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய குடும்பங்களில் தற்போது 25 ஆயிரம் டன் தங்கம் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் 608.80 டன் தங்கம் உள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *