செய்திகள்

இந்திய குடியுரிமையை 10 மாதத்தில் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் துறந்தனர்

வெளியுறவு இணையமைச்சர் முரளிதரன் தகவல்

டெல்லி, டிச.12–

இந்திய குடியுரிமையை கடந்த 10 மாதத்தில் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் துறந்துள்ளனதாக வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரில், 2015 ஆம் ஆண்டு முதல் இந்திய குடியுரிமையை துறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை தர வேண்டும் என, காங்கிரஸ் உறுப்பினர் அப்துல் கலீக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து, இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், குடியுரிமையை துறந்தவர்கள் பட்டியல் குறித்து தெரிவித்துள்ளார்.

1.8 லட்சம் பேர்

அதில், 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்களது குடியுரிமையை துறந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் மக்களவையில் தெரிவித்தார்.

மேலும், 2015 ஆம் ஆண்டில் 1,31,489 பேரும், 2016 ஆம் ஆண்டில் 1,41,603 பேரும், 2017 ஆம் ஆண்டில் 1,33,049 பேரும், 2018 ஆம் ஆண்டில் 1,34,561 பேரும், 2019 ஆம் ஆண்டில் 1,44,017 பேரும், 2020 ஆம் ஆண்டில் 85,256 பேரும், 2021 ஆம் ஆண்டில் 1,63,370 பேரும், 2022 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை 1,83,741 பேரும் தங்களது இந்திய குடியுரிமையை விட்டுக் கொடுத்ததாக முரளிதரன் மக்களவையில் தெரிவித்தார்.

மேலும் 8,441 இந்தியர்கள் தற்போது வெளிநாட்டு சிறைகளில் உள்ளனர் என்றும் இவர்களில் 4,389 பேர் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *