புதுடெல்லி, ஜன.17-–
இந்திய குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்கிறார்.
டெல்லியில் உள்ள கடமைப்பாதையில் இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் பிற நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வது வழக்கம். இதன்படி வருகிற 26-ந்தேதி கொண்டாடப்பட உள்ள 76-வது குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்பார் என கடந்த வாரமே செய்திகள் வெளியாகின.அண்டை நாடான பாகிஸ்தானில்கூட இதுபற்றிய செய்திகள் வெளியானது.
இதற்கிடையே இந்தோனேசிய அதிபர், குடியரசு தின விழாவில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்த அறிக்கையை இந்திய வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பிரதமர் மோடி அழைப்பின் பேரில், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ வருகிற 25 மற்றும் 26-ந்தேதிகளில் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தியாவின் 76-வது குடியரசு தினக் கொண்டாட்டங்களில் அவர் தலைமை விருந்தினராகவும் கலந்துகொள்வார்.
2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிபராக அவர் பதவியேற்ற பிறகு, இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இந்தியாவும், இந்தோனேசியாவும் பல ஆண்டுகளாக அன்பையும், நட்பையும் பகிர்ந்து வருகின்றன. ஒரு விரிவான மூலோபாய கூட்டாளியாக, இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையிலும், இந்தோ-பசிபிக் பற்றிய நமது தொலைநோக்குப் பார்வையிலும் இந்தோனேசியா ஒரு முக்கிய தூணாக உள்ளது.
அவரது அரசுமுறைப் பயணம், இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான மதிப்பாய்வை மேற்கொள்வதற்கும், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து பரஸ்பரம் விவாதிப்பதற்கும் தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.