செய்திகள்

இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நடந்த பாராட்டுவிழா

Makkal Kural Official

முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை, ஏப்.26–

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, அண்ணா நிருவாக பணியாளர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “நான் முதல்வன்” திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற 50 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

அதிகாரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்; பல பேருக்கு நீங்கள் ரோல் மாடலாக இருக்க வேண்டும். சமூக நீதி, நேர்மை, துணிவு ஆகியவற்றை மனதில் வைத்து ஏழை மக்கள் உயர்வுக்காக பாடுபடுங்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:–மாணவர்களும் – இளைஞர்களும் நிச்சயமாக தங்களுடைய லட்சியங்களை அடையவேண்டும்; வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவேண்டும்; வளர்ந்து வரவேண்டும்; என்பதற்காக தான் ‘நான் முதல்வன்’ திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.

கல்வி தான் நமக்கான ஆயுதம். எந்த இடர் வந்தாலும், கல்வியை மட்டும் நாம் விட்டுவிடக் கூடாது. அதனால்தான், “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்தோம். அதைத் தொடர்ந்து “புதுமைப்பெண்” திட்டம், “தமிழ்ப்புதல்வன்” திட்டம், “கல்லூரிக் கனவு” திட்டம், “சிகரம் தொடு” திட்டம், “உயர்வுக்குப் படி” திட்டம் என்று ஏராளமான திட்டங்களை தொடங்கி, கல்வியைக் கொடுத்து, “நான் முதல்வன்” போன்ற திட்டங்களால் உயர்திறன் பெற்று, பெரிய பெரிய நிறுவனங்களில் நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் வேலைவாய்ப்பு பெற்றதை பார்க்கின்றபோது நாம் பூரிப்பு அடைகிறோம்.

தமிழ்நாட்டிற்கு என்று ஒரு ‘அறிவு முகம்’ இருக்கிறது. ஒரு ஐ.ஏ.எஸ் – ஒரு ஐ.பி.எஸ் தமிழ்நாட்டு கேடராக இருந்தால், அவர்களுக்கான மதிப்பே தனி. அதுவும் அவர்கள் தமிழ்நாட்டுக்காரர்களாக இருந்தால், இன்னும் மதிப்பு கூடுதலாகிவிடும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக யு.பி.எஸ்.சி. தேர்வுகளில் நம்முடைய இளைஞர்கள் தேர்வாவது குறைந்துவிட்டது.

ஆனால், இன்றைக்கு அந்த கவலையை நீங்கள் நீக்கிவிட்டீர்கள். குடிமைப் பணி தேர்வுகளுக்குத் தயாரான உங்களுக்கு, நம்முடைய அரசு எப்படியெல்லாம் பயிற்சி கொடுத்தது – ஊக்கம் கொடுத்தது – உங்களுடைய சுமைகளை குறைக்க ஊக்கத்தொகை எல்லாம் கொடுத்து, உங்களில் பலரும் ஊடகங்களுக்குக் கொடுத்த பேட்டிகளில் எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள். அதையெல்லாம் நாங்கள் பார்த்தோம். இதுவே, இன்னும் பல பேரை ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ்-ஆக உருவாக்க செய்யவேண்டும்.

மற்றவர்களுக்கு உதவுவதற்கான உங்கள் பணியை, நீங்கள் தேர்வான அன்றைக்கே தொடங்கிவிட்டீர்கள். அதிகாரம் என்பது இந்தச் சமூகத்துக்கும் – சக மனிதர்களுக்கும் – எளியோர்களுக்கும் உதவுவதாக – அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்துக்குப் பயன்படுவதாக அமையவேண்டும்.

அதிகாரத்தை சரியாக

பயன்படுத்துங்கள்

இன்றைக்கு அதிகாரம் உங்கள் கைகளை நோக்கி வர இருக்கிறது. அதை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். உங்களுக்கு “ரோல் மாடல்” –ஆக பல பேர் இருப்பார்கள். இனிமேல் நீங்கள் பல பேருக்கு ரோல் மாடல் ஆகவேண்டும் – அதுதான் என்னுடைய விருப்பம். இன்றைக்கு தேர்வாகி இருக்கின்ற நீங்கள் சிறப்பாக பணியாற்றுவதன் மூலமாகத் தான் அந்த நிலையை அடையமுடியும்.

என்னுடைய பொதுவாழ்க்கை அனுபவத்தில் இருந்து இதை சொல்கிறேன். முதலில் மக்களுடைய மனதில் இடம் பெறவேண்டும். சமூகநீதி – நேர்மை – துணிவு ஆகியவற்றை மனதில் வைத்துக் கொண்டு, ஏழை எளிய மக்களுடைய உயர்வுக்காகப் பாடுபடுங்கள். இந்த மூன்றையும் மனதில் வைத்துக் கொண்டு பணியாற்றினால், மக்கள் நிச்சயமாக நம்மை மறக்கமாட்டார்கள்.

நான் அடுத்த முறை உங்களை சந்தித்தாலும், உங்களுடைய பணிகளையும், சாதனைகளையும் சொல்லி வாழ்த்தவேண்டும்; அதுதான் என்னுடைய ஆசை. எனக்கு அந்த நம்பிக்கை உங்கள் முகங்களைப் பார்க்கும்போது நிச்சயமாக வருகிறது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

2024–ம் ஆண்டுக்கான குடிமைப் பணி முதன்மைத் தேர்விற்கு 216 ஆர்வலர்கள் முழுநேரமாக இம்மையத்தில் பயிற்சி பெற்றார்கள். படிப்பு ஊக்கத் தொகையாக மாணவர் ஒருவருக்கு மாதம் ரூ.3000 – வீதம் மூன்று மாதங்களுக்கு மொத்தம் ரூ.9 ஆயிரம் – வழங்கப்பட்டது. இவர்களுள் முதன்மைத் தேர்வில் 48 ஆர்வலர்கள் தேர்ச்சி பெற்றார்கள். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆர்வலர்களுக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு இப்பயிற்சி மையத்தால் நடத்தப்பட்டது. மேலும், புதுடெல்லியில் நடைபெற்ற ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்ள ஆர்வலர்களுக்கு தலா ரூ.5000 – வழங்கப்பட்டது.

2025–-26–ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், பயணச் செலவு மற்றும் சிறப்புப் பயிற்சிகளுக்கான ஊக்கத் தொகை ரூபாய் 50,000 என உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 50 மாணவர்கள் தேர்வு

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பொது நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் தகுதியுடைய ஆர்வலர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.7,500 – வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 2023–ம் ஆண்டு முதல் முதன்மைத் தேர்வு பயிற்சி பெறும் ஆர்வலர்களுக்கு 25,000 ரூபாய் ரொக்கமாக இத்திட்டத்தின் மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 1000 ஆர்வலர்களில் 276 ஆர்வலர்கள் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அதில் ஆளுமை தேர்விற்கு 134 ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களில் இறுதியாக 50 மாணவ, மாணவியர்கள் அகில இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

இதில், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் முதன்மைத் தேர்வுக்கு தங்கிப்பயின்ற ஆர்வலர்களான பா.சிவச்சந்திரன் என்பவர் அகில இந்திய அளவில் 23-வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும், ர.மோனிகா என்பவர் அகில இந்திய அளவில் 39-வது இடத்தையும், மாநில அளவில் 4-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

11 பேர் பெண்கள்

இதில் தமிழ் வழியில் தேர்வு எழுதிய சு. சங்கர்பாண்டியராஜ் மற்றும் மாற்றுத்திறனாளி ப. காமராஜ் ஆகிய இரண்டு பேர் அடங்குவர். மேலும், வெற்றி பெற்றவர்களுள் 11 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து வெற்றியாளர்களுக்கும் பாராட்டு விழா நடத்தப்பட்டு, சான்றிதழ்கள் மற்றும் திருக்குறள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், அண்ணா நிருவாக பணியாளர் கல்லூரியின் கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் கோ. பிரகாஷ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கிராந்தி குமார் பாடி, நான் முதல்வன் போட்டி தேர்வு சிறப்பு திட்ட இயக்குநர் சி. சுதாகரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *