செய்திகள்

இந்திய ஒற்றுமை யாத்திரையின் குரலை யாரும் மவுனிக்க முடியாது: ராகுல் காந்தி

கர்நாடகா, அக். 1–

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் குரலை யாரும் மவுனிக்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கர்நாடகாவில் ஒற்றுமைக்கான பாத யாத்திரையை நேற்று தொடங்கினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் கடந்த 7 ஆம் தேதி ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கினார். தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து, கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அவர் நேற்று நடைப்பயணத்தை தொடர்ந்தார்.

ராகுல்காந்தியை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, முன்னாள் துணை முதலமைச்சர் பரமேஷ்வர் உள்ளிட்டோர் வரவேற்றனர். ராகுல் காந்தியை பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான காங்கிரசாரும் பொதுமக்களும் நடந்து சென்றனர்.

அலட்சியப்படுத்த முடியாது

அப்போது குண்டுலுபேட்டில் ராகுல்காந்தி பேசுகையில், “வெறுப்பைப் பரப்பி ஒற்றுமை யாத்திரையை சிதைக்க வேண்டும் என்பது தான் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் ஒரே இலக்கு. நான் இந்த நடைப்பயணத்தின் போது மக்களின் துயரத்தைக் கேட்கிறேன். அவர்களின் பாடுகளை அறிகிறேன். வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சினை, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கல் என இந்த ஒட்டுமொத்த தேசமும் வேதனையை என்னிடம் பகிர்கிறது. இந்த யாத்திரையை எந்த சக்தியாலும் மவுனிக்க முடியாது. இந்த நடைப்பயணம் தேசத்தின் ஒருமித்த குரல் என்றார்.

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தியின் நடைப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் தனது செல்வாக்கை நிரூபிப்பதற்காக 17 மாவட்டங்களிலும் ராகுல் காந்தியை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *