சிறீநகர், ஜன. 28–
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை நடைப்பயணத்தில் காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி கலந்து கொண்டுள்ளார்.
இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கினார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைப்பயணம் காஷ்மீரில் நிறைவடைகிறது. அதன்படி பல்வேறு மாநிலங்களைக் கடந்து நடைப்பயணத்தின் இறுதிப் பகுதியான ஜம்மு காஷ்மீரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
மெகபூபா முப்தி பங்கேற்பு
நேற்றைய நடைபயணத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ராகுல்காந்தியின் பாதுகாப்பில் குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் அங்கு போதிய அளவு காவல்துறையினர் இல்லாததால் ராகுல் காந்தியின் நடைப்பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தி கலந்து கொண்டார். முப்தியுடன் நிறைய பெண்களும் கலந்து கொண்டனர். சுர்சு என்ற இடத்தில் பல தொண்டர்கள் முன்னியில் இருவரும் நடைப்பயணத்தை மேற்கொண்டனர். இன்றைய நடைப்பயணத்தில் பிரியங்கா காந்தியும் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.