சண்டிகர், ஜன. 11–
பஞ்சாபில் இருந்து தனது இந்திய ஒற்றுமைப் பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக, ராகுல் காந்தி ஃபதேர் சாஹிப் குருத்வாரா சென்று வழிபட்டார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமைப் பயணத்தை இன்று பஞ்சாப் மாநிலம் ஃபதேகர் சாஹிப் மாவட்டத்தில் உள்ள சிர்ஹிந் பகுதியில் இருந்து தொடங்கினார். இதற்காக அவர் நேற்று மாலையிலேயே சிர்ஹிந்த் வந்தடைந்தார். இன்று காலையில் பயணம் தொடங்குவதற்கு முன்பாக, ஃபதேகர் சாஹிபில் உள்ள குருத்வாரா சென்று வழிபட்டார்.
அன்பின் செய்தியை பரப்புவேன்
இதுகுறித்து காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ராகுல் காந்தி குருத்வாரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “மகிழ்ச்சி அமைதி, செழிப்பு சகோதரத்துவம், தேசத்தின் மீதான அன்பு வேண்டி உங்கள் காலடிக்கு வந்துள்ளேன்… வெறுங்கையுடன் திரும்ப மாட்டேன். உங்களின் ஆசீர்வாதத்துடன் இன்னும் சில நாட்களுக்கு பஞ்சாப் நிலத்தில் அன்பின் செய்தியை பரப்புவேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், இன்று காலையில் சிர்ஹிந்த் பகுதியில் இருந்து நடைப்பயணம் தொடங்கியது. சிர்ஹிந்த் பகுதியில் இருந்து தொடங்கும் இந்திய ஒற்றுமை பயணம், பஞ்சாப்பில் மண்டி கோபிந்த்கர், கன்னா, சஹ்னேவால், லூதியானா, கோரயா, பக்வாரா ஜலந்தர், தசுவான் மற்றும் முகேரியன் வழியாக பயணம் செய்கிறது. ஜம்மு காஷ்மீருக்குள் நுழைவதற்கு முன்பாக ஜனவரி 19ம் தேதி பதான்கோட் பகுதியில் பேரணி நடக்கிறது.
முன்னதாக, ராகுல் காந்தி பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலில் நேற்று வழிபாடு மேற்கொண்டார். பின்னர் அங்கு நடைபெற்ற பஜனையிலும் அவர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.