டெல்லி, ஜன. 9–
ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தில், இன்று பெண்கள் அதிகளவில் பங்கேற்கும் பயணம் நடைபெற்று வருகிறது
இது குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர், தனது டுவிட்டர் பதிவில், “நாளை அனைத்து பெண்களும் பாரத் ஜோடோ யாத்ராவில் பங்கேற்க வேண்டும். இந்த இந்திய ஒற்றுமை பயணத்தில் மிகவும் உற்சாகமான நாளில் இதுவும் ஒன்று. ராகுல் காந்தி, பெண்கள் அதிகாரம் பெறுவதில் உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கிறார், அதை அவர் எதிர்ப்பார்க்கிறார்!” என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கூறி இருந்தார். அதனை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மறுப்பதிவு செய்திருந்தார்.
பெண்கள் பங்கேற்கும் பயணம்
அதன்படி, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் பெண்கள் பெருமளவில் பங்கேற்று உள்ளனர். இதற்கு முன்னர், டிசம்பரில், ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் மாவட்டத்தின் பீபுல்வாடாவை நோக்கி இந்திய ஒற்றுமைப் பயணம் சென்றபோது, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மகிளா சசக்திகரன் திவாஸ் விழாவில், பெண்களுடன் பாரத் ஜோடோ யாத்திரையின் பயணத்தைத் தொடர்ந்து, அந்த நாளைக் கொண்டாடினார். அதேபோல், நவம்பர் 19 அன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளில் இதேபோன்ற நிகழ்வு இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.