செய்திகள்

இந்திய எல்லையிலும் ராணுவ நடவடிக்கைகள்: சீனாவிடம் 500 அணு ஆயுதங்கள், 5,500 கி.மீ தூரம் பாயும் ஏவுகணைகள்

அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிர்ச்சி தகவல்

நியூயார்க், அக். 22–

சீனா தம் வசம் 500 அணு ஆயுதங்களை செயல் நிலையில் வைத்துள்ளதாகவும் 5,500 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளை தயாரித்துள்ளதாவும் அறிந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமாக பென்டகன் ஆண்டுதோறும் வெளியிடும் அறிக்கை மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த ஆண்டும் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான ஆண்டு அறிக்கையை பென்டகன் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

சீனா தன்னிடம் 500 அணு ஆயுதங்களை செயல்படும் நிலையில் வைத்துள்ளது என்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் சீனா வசம் 1,000 அணு ஆயுதங்கள் இருக்கும் என்றும் 2022 ஆம் ஆண்டில் மட்டும் புதியதாக 3 ஏவுகணை தளங்களை சீனா கட்டி முடித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை தளங்களில் 300 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சீனா வைத்துள்ள ஏவுகணைகளின் இலக்கு தூரம் 5,500 கி.மீ. தொலைவு என்று தெரிவித்துள்ள அந்த அறிக்கை, மியான்மர், தாய்லாந்து, இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, நைஜீரியா, நமீபியா, மொசாம்பிக், வங்கதேசம், பப்புவா நியூ கினியா, சாலமன் தீவுகள் மற்றும் தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் ராணுவ தளங்களை அமைக்கவும் மும்முரம் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளது.

இந்திய எல்லையில் நிலை

அதேபோல் சீனா கடற்படையில் இதுவரையில் 340 போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் இருந்த நிலையில் தற்போது 370 போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 395 ஆகவும் 2030-க்குள் 435 ஆகவும் அதிகரிக்க சீனா திட்டமிட்டுள்ளது. அத்துடன் தைவானை ஆக்கிரமித்து கைப்பற்றும் நோக்கத்தில், சீனாவின் முப்படைகளும் முழு வீச்சில் களமிறங்கி உள்ளன என்றும் பென்டகன் அறிக்கையில் அச்சத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்தியா–சீனா எல்லையான லடாக் பகுதியிலும் சீனா பல்வேறு ராணுவத்தை வலிமை படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக்கி இருக்கிறது. புதிய ராணுவ குடியிருப்புகள், புதிய போர் விமான தளங்கள், புதிய ராணுவ ஹெலிபேடுகள் என அதிநவீன வசதிகளுடன் ராணுவ விரிவாக்க நடவடிக்கையை சீனா மேற்கொண்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *