செய்திகள்

இந்திய அரசின் புதிய ஹால்மார்க் விதி: தமிழ்நாட்டில் நகைக்கடைகள் அடைப்பு

சென்னை, ஆக. 23–

இந்திய அரசின் புதிய ஹால்மார்க் விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் நகைக்கடைகள் இன்று முற்பகல் 11.30 வரை மூடப்பட்டது.

இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒவ்வொரு தங்க நகைக்கும் 6 இலக்கம் கொண்ட ஹால்மார்க் அடையாள எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நகைக்கடை உரிமையாளர்கள் வரவேற்றாலும் தர முத்திரை வழங்கும் மையங்களில் போதுமான வசதிகள் இல்லாததால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் முடங்கியுள்ளதாக தங்க நகை வியாபாரிகள் மற்றும் தங்க நகை தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தங்க நகைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க, 2021ஆம் ஆண்டு ஜனவரி 15 முதல் ஹால்மார்க் முத்திரையுடன்தான் தங்க நகைகளை விற்க வேண்டும் என்று கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பரில் இந்திய அரசு அறிவித்திருந்தது. இந்த உத்தரவு கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

ஹால்மார்க் கட்டாயம்

அதன்பிறகு கடந்த ஜூன் மாதம், தங்க நகை விற்பனையாளர்களுடன் அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதும் முதற்கட்டமாக 256 மாவட்டங்களில் ஹால்மார்க் முத்திரையைக் கட்டாயமாக்க முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூன் 16ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.

முதற்கட்டமாக அமல்படுத்தப்பட்ட 256 மாவட்டங்களில், 50 நாட்கள் முடிந்துள்ள நிலையில், ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, அகில இந்திய நகைக்கடைக்காரர்கள் கவுன்சில் சார்பில் இன்று அடையாள வேலை நிறுத்தம் செய்ய, நகைக்கடைக்காரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்திய அரசின் இந்த புதிய விதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இன்று முற்பகல் 11.30 மணி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகைக்கடைகளும் அடைக்கப்பட்டு அடையாள போராட்டம் நடத்தியதாக நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *