இந்திய நாட்டில் அணு ஆற்றல் துறையை உருவாக்கி, உலக நாடுகள் வியக்கும் வண்ணம் அத்துறை வளர்ச்சியடைவதற்கு அடித்தளமிட்ட ஆற்றல் மிக்கவர். ‘இந்திய அணுக்கரு ஆற்றல்’ திட்டத்தின் தந்தையாக கருதப்படுபவர் ஹோமி ஜெஹாங்கீர் பாபா.
அவரது அணுக்கரு ஆராய்ச்சி வரலாறு சாதனை அறிய தொடர்ந்து படியுங்கள்.
1909-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந் தேதி ஹோமி பாபா மும்பையில் பிறந்தார். இவருடைய தந்தை ஜெஹாங்கீர் ஹோர் முஸ்ஜி பாபா மிகப் பெரும் புகழ்பெற்ற வக்கீலாக பணியாற்றி வந்தார். தாயார் பெயர் மெஹெரன். பள்ளிப்படிப்பை முடித்ததும், மும்பையிலுள்ள எல்பின்ஸ்டன் கல்லூரியில் 15 வயதில் சேர்ந்து படிப்பை தொடர்ந்தார். பாபாவின் தந்தை இவரை இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு எந்திர பொறியியல் படிப்பை மேற்கொள்ள அனுப்பி வைத்தார்.
பொறியியல் படிப்பை முடித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பொறியியலில் இவர் இயற்பியலை தனியே படிக்க வேண்டும் என்று விரும்பியதால் அதன்படி கோட்பாட்டியலில் இயற்பியல் படிப்பையும் படித்து, அதன் பின் தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலேயே ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டார்.
1933-ம் ஆண்டு ‘காஸ்மிக் கதிரியக்கத்தின் உள்ளர்ப்பு’ என்ற தன் முதல் ஆய்வறிக்கையை வெளியிட்டு ‘அணுக்கரு இயற்பியலில்’ முனைவர் பட்டம் வென்றார். இந்த ஆய்வறிக்கையின் பயனால் இவர் ‘சர் ஐசக் நியூட்டன்’ பெயரில் மானியம் பெறும் மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனால் இவருடைய கோட்பாட்டில் படிப்பு மேலும் மூன்று ஆண்டுகள் தொடர்ந்தது. முதல் பகுதியில் கேம்பிரிட்ஜில் கோட்பாட்டு இயற்பியலை ‘ரால்ப் எச் பெளலர்’ என்ற அறிவியலறிஞரின் வழிகாட்டுதலிலும், மறு பகுதியை கோப்பன்ஹேகனில் ‘நீல்ஸ் போர்’ என்ற அறிவியலறிஞரின் வழிகாட்டுதலிலும் ஆய்வுகளை மேற்கொண்டு செயல்பட்டார்.
1935-ல் மின்னணு பாசிட்ரான் சிதறலில் ஏற்படும் குறுக்கமைப்பைக் கணக்கிடும் முறையை முதன் முதலாக கண்டுபிடித்ததுடன் அதை ஓர் ஆய்வறிக்கையாகவும் புகழ்பெற்ற ராயல் அறிவியல் நிறுவனத்திற்கு அளித்தார். இந்த சிதறல் பின்னாளில் ‘பாபா சிதறல்’ என்று இவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
1936-ல் வால்டர் ஹெயிட்லர் என்ற அறிவியலறிஞருடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு வேக மின்னணுக்கள் செல்லும் வழி மற்றும் காஸ்மிக் கதிர்ப்பொழிவுகள் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டார்.
1939-ம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பினார்.
பெங்களூருவில் அமைந்திருந்த இந்திய அறிவியல் நிறுவனத்தில், இயற்பியல் துறையில் உயர் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அந்நிறுவனத்தின் தலைவராக விளங்கியவர் இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்ற தமிழர் சர் சி.வி.ராமன். அவருடைய நன்மதிப்பையும் இவர் பணியாற்றிய முறையில் பெற்றார்.