செய்திகள்

இந்திய அணி ஆலோசகராக தோனி நியமனம் ‘‘நல்ல முடிவு’’: கபில் தேவ் கருத்து

மும்பை, செப். 11-

டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு, இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளது ஒரு நல்ல முடிவு என்று கபில் தேவ் கூறியுள்ளார்.

அக்டோபர் 17 முதல் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. நவம்பர் 14ம் தேதி இத்தொடர் முடிவடைகிறது. போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறுகிறது. முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் அனைத்தும் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும். இதில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பாப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதுகின்றன. இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும்.

இந்தியா – பாகிஸ்தான்

குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வின்னர் குரூப் ஏ, ரன்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ரன்னர் குரூப் ஏ, வின்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில், இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணி முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வது இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியானது. இதில் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருக்கும் போது, ஆலோசகர் என்று தோனி எதற்கு? என பலரும் கேள்விகளை எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது ஒரு அருமையான முடிவு என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறுகையில், “இது ஒரு நல்ல முடிவு. நான் எப்போதுமே ஒரு கிரிக்கெட் வீரர் ஓய்வு பெற்றவுடன் மூன்று-நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் மீண்டும் இந்திய கிரிக்கெட் அமைப்புக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் உலக கோப்பையை முன்னிட்டு எடுக்கப்பட்ட இந்த முடிவு சிறப்பானதாகவே தெரிகிறது. ரவியும் (சாஸ்திரி) கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே இது ஒரு முக்கியமான முடிவு என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *