செய்திகள்

இந்தியா வந்துகொண்டிருந்த மேலும் ஒரு கச்சா எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

சென்னை, டிச. 24–

இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த மேலும் ஒரு கப்பல் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த எம்.வி கெம் புளூட்டோ கப்பல் மீது நேற்று அரபிக்கடலில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த டிரோன் தாக்குதல் பரபரப்பு அடங்குவதற்குள் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த மற்றொரு கப்பல் மீது செங்கடலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செங்கடல் வழியாக வந்த காபான் நாட்டைச் சேர்ந்த சாய்பாபா என்ற கப்பல் இந்திய தேசிய கொடியுடன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த போது தாக்குதல் நடத்தப்பட்டது.

அமெரிக்கா தகவல்

இது குறித்து அமெரிக்கா தரப்பில் கூறுகையில், தெற்கு செங்கடலில் சென்று கொண்டு இருந்த இரண்டு வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்து அமெரிக்க கடற்படையிடம் உதவி கோரப்பட்டது. உடனே தாக்குதல் நடத்தப்பட்ட ஏமனில் உள்ள ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்கு அமெரிக்க கடற்படை சென்றது. அங்கு 4 ஆள் இல்லா விமானங்களை தங்களது போர்க்கப்பல் சுட்டு வீழ்த்தியது.

செங்கடல் வழியாக இந்திய கொடியுடன் வந்த சரக்கு கப்பலையும், BLAAMANEN சொந்தமான நார்வே கொடியுடன் வந்த சரக்கு கப்பலையும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த 2 சரக்கு கப்பலில் டேங்கர் மீது டிரோன் மோதியது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அக்டோபர் மாதம் முதல் ஹூதி கிளர்ச்சியாளர்களால் இதுவரை 15 வணிக கப்பல் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது என அமெரிக்க தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து தாக்குதல்களால் பல நாடுகளில் இருந்து இந்தியா வரும் கப்பல் மாற்று வழியில் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *