செய்திகள்

இந்தியா மீது பொருளாதார தடையா?: அமெரிக்கா பதில்

நியூயார்க், நவ. 25–

இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை விதிப்பதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து 5 எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்க, இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 5.5 பில்லியன் டாலர் மதிப்பில் 2019 இல் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பு, தரையிலிருந்து வானில் வரும் இலக்குகளை 400 கிலோமீட்டர் தொலைவிலேயே மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

இதற்கிடையில், எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பு இந்தியாவுக்கு விநியோகிக்கும் பணியை ரஷ்யா தொடங்கியுள்ளது. அதேவேளை, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பு வாங்க, தொடக்கம் முதலே அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மேலும், இந்த விவகாரத்தில் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.

தடை பற்றி முடிவெடுக்கவில்லை

ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கியுள்ளது. இதனால், இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கலாம் என தகவல் வெளியானது. மேலும், நட்பு நாடு என்பதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின.

இந்த நிலையில், எஸ்400 விவகாரத்தில் பொருளாதாரத் தடை விதிப்பதில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து முடிவெடுக்கவில்லை என்று அமெரிக்கா தற்போது தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *