செய்திகள்

இந்தியா மீது தடைவிதிக்க முற்படுவது முட்டாள்தனம்: அமெரிக்க எம்.பி. கடும் எதிர்ப்பு

நியூயார்க், மார்ச் 9–

இந்தியா மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க முற்படுவது முட்டாள்தனமான செயலாக இருக்கும் என, அந்நாட்டு எம்.பி. டெட் குருஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசு, சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ராணுவ தளவாடங்களை விற்பனை செய்யும் நாடுகள், வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கிறது. இதன்படி ரஷ்யாவிடம் ‘எஸ்-400’ ஏவுகணையை வாங்கிய துருக்கி மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அதுபோல, ரஷ்யாவிடம், 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, ஐந்து ‘எஸ்-400’ ஏவுகணைகளை வாங்கும் இந்தியா மீதும், பொருளாதார தடை விதிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

இந்தியா மீது தடையா?

இந்நிலையில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் அடங்கிய வெளியுறவு குழுவின் கூட்டம் நடந்தது. இதில் குடியரசு கட்சி எம்.பி. டெட் குருஸ் பேசும்போது, இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க, அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா மீது தடை விதிப்பது முட்டாள்தனமான செயலாக இருக்கும்.

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா.,வில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என்பது, அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிப்பதற்கு மறைமுக காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்தியா மட்டுமின்றி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் தீர்மானத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனால் இந்தியா மீது தடை விதிக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.