ஜம்மு – காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியது
புதுடெல்லி, மே 11–
இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்று போர் நிறுத்தம் நேற்று அறிவிக்கப்பட்டதையடுத்து ஜம்மு காஷ்மீர் உட்பட எல்லை மாநிலங்களில் அமைதி நிலவி வருகிறது.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தளபதிகள் உள்பட 100 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதலை நடத்தின. தொடக்கத்தில் காஷ்மீர் மாநில எல்லையோர மாவட்டங்களில் சிறிய ரக பீரங்கி தாக்குதலை நடத்திய பாகிஸ்தான், திடீரென்று டிரோன்களை ஏவின. அவை அனைத்தையும் இந்தியா முறியடித்தது. காஷ்மீரை தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கெல்லாம் தக்க பாடம் கற்பிக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தியது.
அணு ஆயுத நாடுகளான இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது உலக நாடுகளை கவலையடைய செய்தது. கடந்த 4 நாட்களாக இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவின் சமாதான முயற்சியால் இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்று போர் நிறுத்தம் ஏற்பட்டது. இரு நாடுகளின் முப்படைகளும் நேற்று மாலை 5 மணி முதல் தாக்குதலை நிறுத்திக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது.
போர் நிறுத்தம் குறித்து முதலில் அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவித்தார்.
ஆனால், போர் நிறுத்தம் நேற்று மாலை 5 மணிக்கு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 8 மணி அளவில் ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதலை தொடங்கியது. கதுவா, சம்பா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சோரா உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி கொடுக்க இந்திய எல்லை பாதுகாப்பு படைக்கு முழு அனுமதி வழங்கப்பட்டது. பாகிஸ்தானின் அனைத்து ட்ரோன்களையும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்ததுஇந்த நிலையில் இன்று காலை முதல் ட்ரோன் தாக்குதல், குண்டு வீச்சு போன்ற எந்தவித தாக்குதலும் இந்தியா ? பாகிஸ்தானின் சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே உள்ள பகுதிகளில் இல்லை என தகவல் கிடைத்துள்ளது. இதை மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் போலீஸ் தரப்பு உறுதி செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் எந்தவித தாக்குதலும் நடைபெறவில்லை என்பதால் அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.
போர் பதற்றத்தை அடுத்து முன்னெச்சரிக்கை கருதி காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட தடைகளும் தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் இன்று காலையில் திரும்ப பெற்றுள்ளது. இதை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பூஞ்ச், உதம்பூர், சம்பா, ரஜோரி, ஜம்மு, உரி, அக்னூர், ஸ்ரீநகர், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ், பதன்கோட், பெரோஸ்பூர் மற்றும் ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. சில நாட்களாக வெறிச்சோடிய சாலைகளில் தற்போது வழக்கம் போல் வாகனங்கள் செல்ல துவங்கியது.
அதே நேரத்தில் பாதுகாப்பு படை எதிர் தரப்பின் நடவடிக்கையை கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
![]()





