சர்வாதிகாரத்தை ஒழிக்க நாடு முழுதும் பிரச்சாரம் செய்வேன் என சூழுரை
டெல்லி, மே 12–
‘ஜூன் 4 ந்தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்’ என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. கடந்த மே 7-ம் தேதி இதுகுறித்து விசாரணை நடைபெற்றது. அப்போது, இடைக்கால ஜாமீன் வழங்கினால் அரசு தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட முடியாது என உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் தெரிவித்தது. அதற்கு அவரும் கையெழுத்திட மாட்டார் என உறுதியளித்தனர்.
கேஜ்ரிவாலுக்கு ஜாமீன்
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை 44 பக்க பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றம் தாக்கல் செய்த நிலையில், ஜூன் 1-ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும் ஜூன் 2-ம் தேதி ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், சிறையிலிருந்து இடைக்கால ஜாமீனில் வெளிவந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெற்கு டெல்லியில் உள்ள மெஹராஜ் சந்தையில் வாகன பேரணியில் ஈடுபட்டார். அப்போது பொது மக்கள் மத்தியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார். இந்த வாகன பேரணியில், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் கலந்து கொண்டார்.
இந்த வாகன பேரணியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:–
‘ஜூன் 4ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சியை அமைக்கும். டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுப்போம். கடவுள் எனக்கு 21 நாட்களை வழங்கியுள்ளார். நான் சர்வாதிகாரத்தை ஒழிக்க நாடு முழுக்க சுற்றி 24 மணி நேரமும் பணியாற்றுவேன். ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வருவதே பிரதமர் மோடியின் ஒரே லட்சியம். எதிர்க்கும் அனைத்து தலைவர்களையும் முடித்து கட்ட பிரதமர் மோடி நினைக்கிறார் என கேஜ்ரிவால் தெரிவித்தார்.